

தென்காசி: தென்காசி மாவட்ட ஆட்சியர் சமீரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: குழந்தை திருமணங்களை தடுப்பது தொடர்பாக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
18 வயது நிறைவடையாத பெண்ணுக்கும், 21 வயது நிறைவடையாத ஆணுக்கும் குழந்தைதிருமணம் செய்து வைக்கும் பெற்றோர்கள் மீதும், ஊக்குவிப்பவர்கள் மீதும், குழந்தை திருமணத்தில் கலந்துகொள்பவர்கள் மீதும் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின்படி முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டணை அல்லது ரூ.1 லட்சம் அபராதம் அல்லது இரண்டு தண்டனைகளும் சேர்ந்து விதிக்கப்படும். குழந்தை திருமணங்கள் உறுதி செய்யப்படும்பட்சத்தில் தகவல் தெரிவிக்க விரும்புவோர், 1098 என்ற சைல்டுலைன் தொலைபேசி எண்ணிலும், 181 என்ற மகளிர் உதவி தொலைபேசி எண்ணிலும் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.