Published : 05 Jun 2021 03:14 AM
Last Updated : 05 Jun 2021 03:14 AM
வேலூர்: மோர்தானா அணை நீர்ப்பிடிப்புப் பகுதியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் கவுன்டன்யா ஆற்றில் எந்த நேரத்திலும் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டத்துக்கு உட்பட்ட மோர்தானா கிராமத்தில் கவுன்டன்யா ஆற்றின் குறுக்கே மோர்தானா நீர்த்தேக்க அணை கட்டப்பட்டுள்ளது. 11.50 மீட்டர் உயரமுள்ள இந்த அணையில் 261.36 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்க முடியும். அணையில் தற்போது 11.40 மீட்டர் உயரத்துக்கு நீர் இருப்பு உள்ளது.
இதற்கிடையில், வேலூர் மாவட்டத்துக்கு அடுத்த 5 நாட்களுக்கு கன மழைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனால், மோர்தானா அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் கனமழை பெய்து உபரி நீர் வெளியேறினால் கவுன்டன்யா ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. இதை பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
மேலும், கவுன்டன்யா ஆற்றின் கரையோரம் உள்ள மோர்தானா, கொட்டரமடுவு, ஜிட்டப்பள்ளி, சேம்பள்ளி, ஜங்காலப்பள்ளி, உப்பரபள்ளி, தட்டப்பாறை, ஆண்டிகான்பட்டி, ரங்கசமுத்திரம், ரேணுகாபுரம், அக்ராவரம், பெரும்பாடி, மீனூர், மூங்கப்பட்டு, சீவூர், குடியாத்தம் நகரம், இந்திரா நகர், ஒலக்காசி, சித்தாத்தூர் மற்றும் கவுன்டன்யா ஆறு பாலாற்றுடன் கலக்கும் ஐதர்புரம் கிராமங்களில் ஆற்றின் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் மேடான பகுதிக்குச் செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘கவுன்டன்யா ஆற்றில் எந்த நேரமும் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால் ஆற்றில் குளிப்பது, துணிகள் துவைப்பது போன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம். மேலும், சிறுவர்களை குளிக்க அல்லது விளையாட பெற்றோர்கள் யாரும் அனுமதிக்கக்கூடாது’’ என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT