கரோனா தடுப்புப் பணிகளை கண்காணிக்க 252 மண்டலக் குழுக்கள்  :  சேலம் மாவட்ட ஆட்சியர் தகவல்

கரோனா தடுப்புப் பணிகளை கண்காணிக்க 252 மண்டலக் குழுக்கள் : சேலம் மாவட்ட ஆட்சியர் தகவல்

Published on

கரோனா தடுப்புப் பணிகளை கண்காணிக்க 252 மண்டலக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என சேலம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கை அமல்படுத்தல் மற்றும் கரோனா தொற்று தடுப்பு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பு அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது.

கூட்டத்தில், கரோனா தடுப்புப் பணி சேலம் மாவட்ட பொறுப்பு அலுவலர் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய மேலாண்மை இயக்குநர் முருகேசன் முன்னிலை வகித்தார். கூட்டத்துக்கு, தலைமை வகித்து ஆட்சியர் கார்மேகம் பேசியதாவது:

சேலம் மாவட்டத்தில் தொற்று பரவலை தடுத்தல், ஊரடங்கை கண்காணித்தல், தொற்றினால் பாதிக்கப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டவர்களை கண்காணித்தல் உள்ளிட்ட பணிகளை கவனிக்க 252 மண்டலக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுக்கள் மூலம் கரோனா தொற்று பரவலைத் தடுக்க 100 வீடுகளுக்கு ஒரு களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, அவர்கள் தினமும் வீடுகளுக்கு சென்று பொதுமக்களின் உடல்நிலை குறித்து கேட்டறிந்து கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

களப்பணியாளர்கள் தினசரி காலை 7 மணி முதல் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று பொதுமக்களின் உடல்நிலை குறித்தும், சளி, காய்ச்சல், உடல்சோர்வு, இருமல் போன்ற ஏதாவது அறிகுறிகள் உள்ளதா எனவும் கேட்டறிய வேண்டும்.

மேலும், இக்குழுக்கள் 69 பொறுப்பு அலுவலர்களின் கண்காணிப்பில் பணியாற்றுவதோடு நாள்தோறும் தாங்கள் மேற்கொள்ளும் பணிகள் குறித்த விவரங்களையும், நோய்த்தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பான விவரங்களை பொறுப்பு அலுவலர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் தனி அலுவலர் (நிலம் எடுப்பு) லதா, மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வடிவேல், இணை இயக்குநர் (நலப்பணிகள்) மலர்விழி வள்ளல், சேலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் வள்ளி சத்தியமூர்த்தி, துணை இயக்குநர்கள் (சுகாதாரப்பணிகள்) சுப்பிரமணி, செல்வக்குமார், மாநகர் நல அலுவலர் பார்த்திபன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in