

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் வட்டம் பெரிய சூரியூரில் நெல் கொள்முதல் நிலையம் நேற்று திறக்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு தலைமையில் மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நெல் கொள்முதல் நிலையத்தைத் திறந்துவைத்து, நெல் கொள்முதல் பணிகளைத் தொடங்கிவைத்தார்.
தொடர்ந்து, அமைச்சர் அன் பில் மகேஸ் பொய்யாமொழி கூறியது: திருச்சி மாவட்டத்தில் கோடைப் பருவத்தை முன்னிட்டு விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல்லைக் கொள்முதல் செய்யும் வகையில் திருவெறும்பூர் வட்டத்தில் குண்டூர், சூரியூர், ரங்கம் வட்டத்தில் நவலூர் குட்டப்பட்டு, மணிகண்டம், பூங்குடி, மணப்பாறை வட்டத்தில் மரவனூர், துறையூர் வட்டத்தில் பி.மேட்டூர், ஆலத்துடையான்பட்டி, வைரிசெட்டிபாளையம் என 9 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன என்றார்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் சு.சிற்றரசு, திருவெறும்பூர் வட்டாட்சியர் செல்வகணேஷ், முன்னாள் எம்எல்ஏ கே.என்.சேகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தொடர்ந்து, கும்பக்குடி ஊராட்சியில் குளம் தூர்வாரும் பணியை அமைச்சர் அன்பில் மகேஸ் ஆய்வு செய்தார்.