திருச்சி மாவட்டத்தில் - 16% பேருக்கு கரோனா தடுப்பூசி : வீணாவது 2 சதவீதமாக குறைந்தது

திருச்சி மாவட்டத்தில்  -  16% பேருக்கு கரோனா தடுப்பூசி :  வீணாவது 2 சதவீதமாக குறைந்தது
Updated on
1 min read

திருச்சி மாவட்டத்தில் தடுப்பூசி போட தகுதியானவர்களில் இதுவரை 16 சதவீதம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கரோனா தடுப்பூசிகள் வீணாகும் விகிதமும் 12 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாகக் குறைந்துள்ளது.

திருச்சி மாவட்டத்தில் ஜன.16-ம் தேதி முதல் கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. திருச்சி மாவட்டத்தில் அரசு நகர்ப்புற மற்றும் கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் என மொத்தம் 84 இடங்களில் தடுப்பூசி போடப்படுகிறது.

மருத்துவத் துறையினர், முன்களப் பணியாளர்கள், 45 வயதுக்கு அதிகமானோர் ஆகியோ ரைத் தொடர்ந்து தற்போது 18 வயது முதல் 44 வயது வரையிலானவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதன்படி, திருச்சி மாவட்டத்தில் நேற்று வரை 16 சதவீதம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை அலுவலர்கள் கூறியது: திருச்சி மாவட்டத்துக்கு 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு போடுவதற்காக நேற்று முன்தினம் வரை கோவிஷீல்டு 2,77,800 டோஸ்கள், கோவாக்சின் 30,800 டோஸ்கள், 18 வயது முதல் 44 வயது வரையிலானவர்களுக்கு போடுவதற்காக கோவிஷீல்டு 44,500 டோஸ்கள், கோவாக்சின் 7,700 டோஸ்கள் பெறப்பட்டுள்ளன.

திருச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 3,35,509 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இது, திருச்சி மாவட்டத்தில் தடுப்பூசி போடுவதற்கு தகுதியானவர்களில் 16 சதவீதம் ஆகும்.

18 வயது முதல் 44 வயது வரையிலானவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த மே 25-ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், தடுப்பூசி இல்லாததால் கடந்த 3 நாட்களாக தடுப்பூசி முகாம் நடைபெறவில்லை.

18,000 டோஸ் வந்தன

திருச்சி மாவட்டத்தில் பல்வேறு காரணங்களால் கரோனா தடுப்பூசிகள் வீணாகும் விகிதம் தொடக்கத்தில் 12 சதவீதமாக இருந் தது. தொடர் அறிவுறுத்தல் மற்றும் விழிப்புணர்வு காரணமாக இது தற்போது 2 சதவீதமாகக் குறைந்துள்ளது என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in