நாமக்கல்லில் தனியார் மருத்துவமனைகளில் - முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 86 கரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை : அமைச்சர் மதிவேந்தன் தகவல்

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காணொலிக் காட்சி மூலம் கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து தனியார் மருத்துவமனை மருத்துவர்களுடன் அமைச்சர் மா.மதிவேந்தன் கலந்துரையாடினார். அருகில் மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காணொலிக் காட்சி மூலம் கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து தனியார் மருத்துவமனை மருத்துவர்களுடன் அமைச்சர் மா.மதிவேந்தன் கலந்துரையாடினார். அருகில் மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ்.
Updated on
1 min read

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் 86 பேருக்கு முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் கரோனா வைரஸ் தொற்றுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, என தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் மா.மதிவேந்தன் தெரிவித்தார்.

கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தனியார் மருத்துவமனை மருத்துவர்களிடம் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாடல் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் தலைமை வகித்தார். சுற்றுலாத் துறை அமைச்சர் மா.மதிவேந்தன் பங்கேற்று தனியார் மருத்துவமனை மருத்துவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:

நாமக்கல் மாவட்டம் முழுவதும் 2,500 பல்ஸ் ஆக்சி மீட்டர்களுடன் தன்னார்வலர்கள் வீடு வீடாகச் சென்று பொதுமக்களுக்கு கரோனா அறிகுறி உள்ளதா என சோதனை மேற்கொள்கின்றனர். அதனடிப்படையில் நோயாளிகள் கண்டறியப்பட்டு உடனடியாக கரோனா சிகிச்சை மையங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.

மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தனியார் மருத்துவமனைகளில் 50 சதவீத படுக்கைகளை கரோனா சிகிச்சைக்காக வழங்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. இதன்படி 772 படுக்கைகள் வழங்கப்பட்டுள்ளது.

முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தற்போது 86 நோயாளிகளுக்கு கரோனா தொற்றுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் துர்கா மூர்த்தி, மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் த.கா.சித்ரா, தேசிய நலக்குழும தொடர்பு அலுவலர் ரெங்கநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in