

மூன்று நாட்களுக்கு மேற்பட்ட காய்ச்சல் உள்ள நோயாளிகள் பற்றிய விவரங்களை அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தெரியப்படுத்த வேண்டும், என தனியார் கிளினிக், மருத்துவமனை மருத்துவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியார் கிளினிக் மருத்துவமனை மருத்துவர்கள் தங்களிடம் சிகிச்சை பெற வரும் நோயாளிகள் சமூக இடைவெளியைக் கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும். அவர்கள் முகக்கவசம் கட்டாயமாக அணிய வேண்டும். மருத்துவமனையில் நுழையும் போதும், வெளியேறும் போதும் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். புறநோயாளிகளின் பெயர், முகவரி, கைபேசி எண் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
மூன்று நாட்களுக்கு மேற்பட்ட காய்ச்சல் உள்ள நோயாளிகள் பற்றிய விவரங்களை அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தெரியப்படுத்த வேண்டும். மூன்று நாட்களுக்கு மேற்பட்ட காய்ச்சல் நோயாளிகள் கரோனா பரிசோதனை மேற்கொண்டதை உறுதி செய்தல் வேண்டும். கரோனா தொற்று கண்டறியப்பட்டால் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மருத்துவக்கழிவுகளை சரியான முறையில் அப்புறப்படுத்த வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.