

வேலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களில் 22,232 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதுடன், 372 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 10 நாட்களில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 383 படுக்கைகள் கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ளன.
வேலூர் மாவட்டத்தில் கரோனா பரவல் தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட கண் காணிப்பு அலுவலரும் தமிழ்நாடு நகர்புற உள்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநருமான டாக்டர் ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன் முன்னிலை வகித்தார். இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார், ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் மாலதி, சுகாதார பணிகள் துணை இயக்குநர் மணிவண்ணன், அரசு மருத்துவக் கல்லூரி டீன் செல்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் கண்காணிப்பு அலுவலர் டாக்டர் ஸ்வர்ணா பேசும்போது, ‘‘வேலூர் மாவட் டத்தில் கரோனா இரண்டாம் அலையில் கடந்த ஏப்ரல் 1-ம் தேதி தொடங்கி மே 30-ம் தேதி வரை தொற்று பாதிப்பு 22,232 -ஆக உள்ளது. இவர்களில், 18,269 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 371 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 3,592 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், சிறப்பு மையங்கள், வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாவட்டத்தில் இதுவரை 7 லட்சத்து 39 ஆயிரத்து 441 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், 42,947 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு அரசுஆய்வகம், 4 தனியார் ஆய்வகங் கள் மூலம் தினசரி சுமார் 5 ஆயிரம் பேருக்கு பரிசோதனை நடத்தப்படுகிறது. வேலூர் மாநகராட்சியில் தொற்று குறைந் தாலும் மாவட்டத்தின் பிற பகுதி களில் தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளது.
5,187 படுக்கை வசதிகள்
இதில், வேலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் 260, குடியாத்தம் அரசு மருத்துவமனையில் 50, பேரணாம்பட்டு அரசு மருத்துவ மனையில் 18, அணைக்கட்டு அரசு மருத்துவமனையில் 25, தந்தை பெரியார் அரசினர் பொறியியல் கல்லூரி மையத்தில் 30 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
வேலூர் மாவட்டத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதாக இதுவரை ரூ.1.12 கோடி அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் வசதிக்காக 887 வாகனங்கள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை 2.22 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
கரோனா தொற்று தாக்கத்தை குறைக்கும் வகையில் 100 வீடுகளுக்கு ஒரு களப்பணியாளர் வீதம் நியமிக்கப்பட்டு அவர்கள் தினசரி வயதானவர்கள், கர்ப்பிணிகள், இணை நோய் உள்ளவர்களின் இதயதுடிப்பு, ஆக்சிஜன் அளவை கண்காணித்து வருகின்றனர்.
மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தேவை குறித்து 24 மணி நேரமும் கண்காணிக்க மாநகராட்சி அலுவலகத்தில் கட்டளை அறை தொடங்கப்பட் டுள்ளது. இதில், வரப்பெறும் அழைப்புகளுக்கு தீர்வு காணப் படுகிறது.
மாவட்டத்தில் குழந்தைகள், காப்பகங்கள், முதியோர் இல்லங்கள், ஆதரவற்றோர் இல்லங்களில் அவ்வப்போது கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது’’ என தெரிவித்தார்.