கூடுதலாக அமைக்கப்பட்ட 300 படுக்கைகள் - பெருந்துறை அரசு மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு : மருத்துவர், செவிலியருக்கு பணி நியமன ஆணை
பெருந்துறை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 300 படுக்கைவசதிகள் கொண்ட பிரிவை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார்.
கரோனா பரவலைக் கட்டுப் படுத்துவது குறித்து ஆய்வு செய்வதற்காக, நேற்று முன்தினம் இரவு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஈரோடு வந்தார். நேற்று காலை பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்ற முதல்வர் ஸ்டாலின், அங்கு புதிதாக அமைக்கப்பட்ட ஆக்சிஜன் இணைப்புடன் கூடிய 300 படுக்கை வசதி கொண்ட வளாகத்தைப் பார்வையிட்டார்.
இம்மருத்துவமனையில் ஏற்கெனவே, ஆக்சிஜன் இணைப்புடன் உள்ள 610 படுக்கைகள் உள்ள நிலையில், தற்போது புதிதாக, ரூ.3.50 கோடி செலவில், ஆக்சிஜன் இணைப்புடன் கூடிய 300 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது என முதல்வருக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர் போன்ற மாவட்டங்களில் இருந்து வரும் நோயாளிக ளையும், இங்கு அனுமதிப்பது குறித்து அமைச்சர்கள் முத்துசாமி, மா.சுப்பிரமணியன் ஆகியோர் விளக்கமளித்தனர்.
இவ்வளாகத்துக்குத் தேவை யான கூடுதல் வசதிகள் குறித்து அவர்களிடம் முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார். பின்னர், கரோனா சிகிச்சை பிரிவுக்காக தேர்வு செய்யப் பட்ட, தற்காலிக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு முதல்வர் பணி நியமன ஆணை வழங்கினார்.
மேலும், மருத்துவமனை வளாகத்தில், ரோட்டரி சங்கம் சார்பில், ரூ.14 கோடியில் ஆக்சிஜன் வசதியுடன் 400 படுக்கைகள் அமைப்பதற்காக நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளையும் அவர் பார்வையிட்டார். விரைவாக, இவ்வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
ஆய்வில் அமைச்சர்கள் சு.முத்துசாமி, மா.சுப்பிரமணியன், சாமி நாதன், எம்.பி.க்கள் கணேசமூர்த்தி, சுப்பராயன், அந்தியூர் செல்வராஜ், அந்தியூர் எம்.எல்.ஏ. ஏ.ஜி.வெங்கடாசலம், திமுக துணை பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன், மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
