

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 40 வயது பெண் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, குணமடைந்தார். இந்நிலையில், அவருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு இருந்துள்ளது. இதற்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 20-ம் தேதி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் சேர்க்கப்பட்டார்.
அவருக்கு, அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, தொடர் கண்காணிப்பில் இருந்தார். நீரிழிவு நோயாலும் அவர் பாதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில், நேற்று காலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்போது கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட 3 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வெள்ளைப் பூஞ்சை நோயால் யாரும் அனுமதிக்கப்படவில்லை என்று மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் ரவிச்சந்திரன் கூறினார்.