முழு ஊரடங்கால் பரமத்தி வேலூர் பகுதியில் - வாழை மரத்தில் பழுத்து வீணாகும் பழங்கள் : அரசு கொள்முதல் செய்ய விவசாயிகள் வேண்டுகோள்

முழு ஊரடங்கால் பரமத்தி வேலூர் பகுதியில்  -  வாழை மரத்தில் பழுத்து வீணாகும் பழங்கள் :  அரசு கொள்முதல் செய்ய விவசாயிகள் வேண்டுகோள்
Updated on
1 min read

முழு ஊரடங்கால் பரமத்தி வேலூர், மோகனுார் சுற்றுவட்டாரத்தில் பலஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பள வில் சாகுபடி செய்யப்பட்டுள்ள வாழைப்பழங்களை விற்பனைக்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், வாழை மரத்தில் பழங்கள் பழுத்து வீணாவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலுா், மோகனுார் வழியாக காவிரி ஆறு பாய்ந்து செல்கிறது. இதை மையப்படுத்தி காவிரிக் கரையோரத்தில் பல விவசாயிகள் வாழை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக பரமத்தி வேலுார், பாண்டமங்கலம், பொத்த னுார், வடுகப்பட்டி, மோகனுார், ஒருவந்துார் உள்ளிட்ட பகுதியில் வாழை சாகுபடி பிரதானமாக உள்ளது.

பூவன், ரஸ்தாளி, பச்சை நாடான் உள்ளிட்ட ரக வாழை இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது. உற்பத்தி செய்யப்படும் வாழைப் பழங்கள் பரமத்தி வேலுார் வாழை மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டு பின்னர் அங்கிருந்து மாநிலத்தின் பல்வேறு பகுதி மற்றும் வெளிமாநிலங்களுக்கும் விற்பனைக்கு செல்கிறது.

இந்நிலையில், முழு ஊரடங்கு காரணமாக வாழைப்பழங்கள் விற்பனைக்கு கொண்டு செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தவிர, விவசாய தோட்டங்களுக்கு நேரடியாக வாழையை கொள் முதல் செய்ய வியாபாரிகளும் வர முடியாத நிலையுள்ளது. இதனால், அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள வாழை மரங்களில் பழங்கள் பழுத்து வீணாகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

இதுதொடர்பாக மோகனூர் குப்புச்சிப்பாளையத்தைச் சேர்ந்த உழவர் உழைப்பாளி கட்சியின் மாவட்ட செயலாளர், விவசாயி ஓ.பி. குப்புதுரை கூறியதாவது:

பரமத்தி வேலுார், மோகனுார் சுற்றுவட்டாரத்தில் 10 ஆயிரம் ஏக்கரில் வாழை சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது, பண்டிகை மற்றும் முகூர்த்த சீஸன் . இதனால், வாழைக்கு நல்ல விலை கிடைக்கும். ஆனால், தற்போது, முழு ஊரடங்கு காரணமாக எந்த நிகழ்வுகளும் நடைபெறவில்லை.

இதனால், அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ள வாழையை விற்பனைக்கு கொண்டுசெல்ல இயலாத நிலை உருவாகி யுள்ளது. மேலும், கோடை வெயில் காரணமாக வாழை மரத்திலேயே பழுத்து பழங்கள் பறவைகளுக்கு இரையாகி வருவதோடு, அவை அழுகி வீணாகிறது.

கடந்தாண்டு ஊரடங்கின்போது நேரடியாக விவசாயிகளிடம் வாழைப் பழங்களை அரசு கொள்முதல் செய்து அவற்றை கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெறுவோருக்கு வழங்கியது.

இதனால், விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்பில் ஒரு பகுதிதடுக்கப்பட்டது. இதேபோல் இந்தாண்டும் வாழைப்பழங்களை விவசாயிகளிடம் நேரடிக் கொள்முதல் செய்யஅரசும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in