

ஈரோடு மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும், கடந்த சில நாட்களாக 1,500-க்கும் மேற்பட்டவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 51 ஆயிரத்து 401 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 37 ஆயிரத்து 125 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். மேலும், 13 ஆயிரத்து 965 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டம் முழுவதும் 311 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், கரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டத்துக்கு தனி அதிகாரிகள் நியமிக்கப் பட்டுள்ளனர். ஈரோடு மாவட்டத்துக்கு தனி அதிகாரியாக செல்வராஜ் நியமிக்கப் பட்டுள்ளார். அவருக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனி அறை ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.
தனி அதிகாரியின் தலைமை யில் மாவட்ட நிர்வாகம் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப் படுத்தியுள்ளது.