வீடுகளுக்கு நேரடியாகச் சென்று முதியவர்களுக்கு தடுப்பூசி : நுகர்வோர் விழிப்புணர்வு இயக்கம் வலியுறுத்தல்
திருநெல்வேலி மாவட்டத்தில் வயது முதிர்ந்து நடமாட முடியாமல் இருக்கிற முதியவர் களை கண்டறிந்து வீட்டிலேயே அவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு தட்டுப்பூசி வாகனம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட நுகர்வோர் விழிப்புணர்வு இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
மாவட்ட ஆட்சியருக்கு அதன் தலைவர் எஸ்.ஆர்.அனந்தராமன், பொதுச்செயலாளர் கோ.கணபதி சுப்பிரமணியன் ஆகியோர் அனுப்பியுள்ள மனு:
திருநெல்வேலி மாவட்டத்தில் வயது முதிர்ந்து, நடமாட முடியாமல் இருக்கிற முதியவர்களை கண்ட றிந்து வீட்டிலேயே அவர்களுக்கு தேவையான, கோவாக்சின் அல்லது கோவிஷீல்டு தடுப்பூசி போடுவதற்கு தடுப்பூசி வாகனம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோல் மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயது முதிர்ந்த ஆதரவற்ற முதியோர் இல்லங்கள் ஆகியவற்றிலும் தடுப்பூசி முகாம்களை நடத்தி தமிழகத்திலேயே தடுப்பூசி அதிகம் செலுத்தியது திருநெல்வேலி என்ற சிறப்பை பெறுவதற்கு ஆவன செய்ய வேண்டும்.
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 44 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி போட மறுக்கிறார்கள். இதுகுறித்து ஆய்வு செய்து அங்கு எந்த வயதினரும், அவர்கள் விரும்புகிற தடுப்பூசி செலுத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண் கண்ணாடி கடைகள்
கண்ணின் குறைபாடுகளுக்கு கண்ணாடி அணிவதும் ஒரு தீர்வாகும். எனவே, மருந்து கடைகளுக்கு கொடுக்கும் அனுமதியைப் போல் கண் கண்ணாடி கடைகளுக்கும் ஊரடங்கு காலத்தில் தமிழகம் முழுவதும் திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று தெரிவித் துள்ளார்.
