தளர்வில்லா முழு ஊரடங்கை மீறி - சேலத்தில் சாலைகளில் காய்கறி விற்பனை : கண்காணிப்பை தீவிரப்படுத்த வலியுறுத்தல்
தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், கரோனா தடுப்பு விதிமுறைகளை மீறி சேலத்தில் சாலைகளில் காய்கறிகள் விற்பனை நடைபெற்றது. பொதுமக்கள் பலர் சமூக இடைவெளி கடைபிடிக்காமல் திரண்டு வந்து பொருட்களை வாங்கிச் சென்றனர்.
கரோனா தொற்று இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில், மாநிலம் முழுவதும் தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது. பொதுமக்களின் அத்தியாவசியப் பொருட்களின் தேவைக்காக வாகனங்கள் மூலம் காய்கறி மற்றும் மளிகைப் பொருட்கள் விற்பனை செய்ய மாநகராட்சி நி்ர்வாகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வீதிகளுக்கு வரும் வாகனங்களில் பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்கிக் கொள்ள வேண்டும் எனவும் தேவையின்றி சாலைகளில் சுற்றித்திரியக் கூடாது எனவும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று காலை விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் சேலம் முதல் அக்ரஹாரத்தில் கரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறி சாலைகளில் காய்கறிக் கடைகள் வைத்தனர். இங்கு ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து சமூக இடைவெளி கடை பிடிக்காமல் காய்கறிகளை வாங்கிச் சென்றனர். இதுதொடர்பாக அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை.
அரசின் நடவடிக்கைக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்காமல் விதிமீறி இதுபோல கூட்டம், கூட்டமாக சேர்வது கரோனா தொற்று பரவலுக்கு வழி வகுக்கும் என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டினர்.
மேலும், இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தி, வரும் நாட்களில் சாலைகளில் காய்கறி கடைகள் போட அனுமதிப்பதையும், தேவையில்லாமல் பொதுமக்கள் வெளியே வருவதை காவல்துறையினர் தடுக்க வேண்டும் எனவும் வரும் நாட்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
