

தினத்தந்தி நாளிதழ் நிறுவனரும், தமிழக சட்டப்பேரவை முன்னாள் தலைவரும், முன்னாள் அமைச்சருமான சி.பா.ஆதித்தனார் நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கைகள்:
முதல்வர் மு.க.ஸ்டாலின்: அண்ணா தலைமையில் அமைந்த முதல் திமுக அரசில் தமிழக சட்டப்பேரவைத் தலைவராகவும், கருணாநிதி அமைச்சரவையில் கூட்டுறவுத் துறை அமைச்சராகவும் பணியாற்றி, தமிழ் மொழிப் பற்று, நாட்டுப் பற்று ஆகியவற்றின் அடையாளமாகத் திகழ்ந்த டாக்டர் சி.பா.ஆதித்தனாரின் நினைவு நாளான இன்று (மே 24) தமிழகத்துக்கும், தமிழ் மொழிக்கும் அவர் ஆற்றிய சேவைகளை நினைவு கூர்ந்து பாராட்டி, மரியாதை செலுத்துகிறேன்.
பேரவைத் தலைவராக சட்டமன்ற ஜனநாயகத்துக்கும், அமைச்சராக தமிழக மக்களுக்கும் அவர் ஆற்றிய சீர்மிகு பணிகளைப் போற்றிப் பாராட்டி, நினைவுகூரும் வகையில் சி.பா.ஆதித்தனார் உருவச் சிலைக்கு மாலையிட்டு மரியாதை செலுத்த மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோருக்கு உத்தரவிட்டேன்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: உயிர் தமிழுக்கு, உடல் மண்ணுக்கு என்று முழங்கி அதன்படியே வாழ்ந்து காட்டியவர் சி.பா.ஆதித்தனார். செய்தித்தாள்கள் முன்னேறிய சமூகத்தினரின் கைகளில் மட்டுமே இருந்த நிலையை மாற்றி, தேநீர்க் கடைகளில் தினத்தந்தியை தவழச் செய்தார். மாடி வீட்டில் வசிப்பவர்கள் மட்டுமல்லாமல், குடிசை வீட்டில் வசிப்போரும், ஏழை, எளிய பாட்டாளிகளும் நாளிதழ்களைப் படிக்க பயிற்றுவித்தார். அவரது புகழ் தமிழ் மண்ணில் என்றைக்கும் நிலைத்து நிற்கும்.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி: பெரியாரால் பெரிதும் பாராட்டப்பட்டவரும், ஒரே லட்சியத்துக்கான அறப்போரில் பெரியாருடன் ஒன்றாக கைதாகி சிறையில் அடுத்தடுத்த அறைகளில் இருந்ததோடு, ‘தமிழ்ப் பத்திரிகை உலகில் எவரும் சாதிக்க முடியாத பெரும் புரட்சியை தனிப்பெரும் சாதனையாகச் செய்தவர் சி.பா.ஆதித்தனார்’ என்று பெரியாராலேயே மனம் திறந்து பாராட்டப் பெற்றவர்.