

திருச்சி மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆன்டிபயாடிக் மாத்திரை(அசித்ரோமைசின்) இல்லாததால், சிகிச்சை முடிந்து வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ள கரோனா தொற்றாளர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
திருச்சி மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, கரோனா பாதுகாப்பு சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்படுபவர்கள் 5 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு, வீடுகளுக்குச் சென்று தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர். அப்போது, அவர்களுக்கு ஆன்ட்டிபயாட்டிக் உள்ளிட்ட சில மாத்திரைகள் பரிந்துரைக்கப்பட்டு, அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் வாங்கிக் கொள்ள அறிவுறுத் தப்படுகின்றனர்.
இந்நிலையில், கரோனா பாதுகாப்பு சிகிச்சை முகாமில் அனுமதிக்கப்பட்டு, அண்மையில் வீடு திரும்பிய திருச்சி எடமலைப்பட்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த ஒருவர், தனது உறவினர் ஒருவரை அப்பகுதியில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்து, மாத்திரை வாங்க நேற்று அனுப்பியுள்ளார். ஆனால் அங்கு, குறிப்பிட்ட ஆன்டிபயாடிக் மாத்திரை (அசித்ரோமைசின்) இல்லை என்று கூறியதுடன், மருந்துச் சீட்டில் உள்ள பிற மருந்துகளையும் தர மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதேபோல, மாநகரில் உள்ள 18 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் ஆன்டிபயாட்டிக் மாத்திரை இருப்பு இல்லை என்பது தெரியவந்தது.
இதுகுறித்து தொற்றாளரின் உறவினர் கூறும்போது, “கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் வீடு திரும்பிய எனது உறவினருக்கு மருந்து, மாத்திரை வாங்க எடமலைப்பட்டிப்புதூரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்றபோது, அங்கு குறிப்பிட்ட ஆன்டிபயாட்டிக் மாத்திரை இல்லை எனக் கூறியதுடன், மருந்துச் சீட்டில் உள்ள மற்ற மாத்திரைகளையும் தர முடியாது என மறுத்துவிட்டனர். இதனால், தனியார் மருந்தகத்தில் வாங்க நேரிட்டது’’ என்றார்.
இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் சு.சிவசுப்பிரமணியனிடம் கேட்டபோது அவர் கூறியது: திருச்சி சுகாதாரப் பணிகள் துணை இயக்குநரிடம் தெரிவித்து, குறிப்பிட்ட ஆன்டிபயாடிக் மாத்திரைகளை உடனடியாக வரவழைத்து, அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
எடமலைப்பட்டிப்புதூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிற மாத்திரைகளையும் தரவில்லை என்று எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.