

சிவகங்கை மாவட்டத்தில் கோவே க்சின் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால், 2-வது தவணை தடுப்பூசி செலுத்த முடியாமல் பல ஆயிரம் பேர் தவித்து வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டத்தில் கரோனா தொற்றால் 12 ஆயிரத் துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது 1,600-க்கும் மேற்பட்டோர் மருத்து வமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து கரோனா பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ள தடுப்பூசி செலுத்த பலரும் ஆர்வமாக உள்ளனர். மாவட்டத்தில் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, காரைக்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் என 54 இடங்களில் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இதுவரை 85,724 பேர் தடுப்பூசி செலுத்தி உள்ளனர். இதில் 20,672 பேர் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தி உள்ளனர். இந்நிலையில், மாவட்டத்தில் கோவேக்சின் தடுப்பூசி இல்லாததால், அனைத்து மையங்களிலும் தடுப்பூசி செலுத்துவது நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் கோவேக்சின் செலுத்திய பல ஆயிரம் பேர் 2-வது தவணை தடுப்பூசி செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். இதில் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனையில் மட்டும் கோவேக்சின் முதல் தவணையாக 1,782 பேரும், 2-வது தவணையாக 1,164 பேரும் செலுத்திக் கொண்டனர். ஆனால், மற்றவர்கள் 2-வது தவணைக்காக தினமும் அலைந்து வருகின்றனர். கோவேக்சின் தடுப்பூசி கிடைக்க சுகாதாரத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘கோவேக்சின் பற்றாக்குறை இருப்பது உண்மைதான். அடுத்த வாரம் போதுமான அளவு கோவேக்சின் தடுப்பூசி வந்துவிடும். 2-வது தவணை தருப்பூசி செலுத்துவோருக்கு முன்னுரிமை வழங்கப்படும். கோவிஷீல்டு தடுப்பூசி தொடர்ந்து செலுத்தப்பட்டு வருகிறது. 2,500-க்கும் மேல் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன’ என்றனர்.