

திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு சுற்றுவட்டார பகுதிகளில் மின்சார டவர் அமைப்பு பணிகளில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் 31 பேர் ஈடுபட்டிருந்தனர். மாஞ்சோலை பகுதிக்கு சென்று டவர் அமைப்பு பணிகளில் ஈடுபட்டபின் லாரியில் அவர்கள் நேற்று முன்தினம் இரவில் திரும்பிக் கொண்டிருந்தனர்.
மணிமுத்தாறு தலையணை பகுதிக்கு அருகில் மூணுமுடங்கி என்ற இடத்தில் வந்தபோது, திடீரென்று லாரியின் முன்பக்க டயர் வெடித்தது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி அங்குள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.
இதில் பலத்த காயமடைந்த மணிமுத்தாறு பொட்டல் கிராமத்தை சேர்ந்த பொன்னுத்துரை (36), தெற்குபாப்பாங்குளம் பூதப்பாண்டி (35) ஆகியோர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். லாரியில் இருந்த 29 பேர் காயமடைந்தனர். அவர்களில் பலத்த காயமடைந்த 5 பேர் திருநெல்வேலி அரசு மருத்துவமனையிலும், மற்றவர்கள் அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். கல்லிடைக்குறிச்சி போலீஸார் வழக்கு பதிந்துள்ளனர்.