

சேலத்தில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மூதாட்டியின் சிகிச்சைக்கு உதவிய பெண்ணை முதல்வர் ஸ்டாலின் பாராட்டினார்.
சேலம் சீலநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் சுசீலா (70). உடல் நலம் பாதிக்கப்பட்ட அவரை நேற்று முன்தினம் அவரது மகன் இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, சுசீலா மயங்கி கீழே விழுந்தார். மயக்கத்தில் இருந்ததால் அவரை இருசக்கர வாகனத்தில் சிகிச்சைக்கு அழைத்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
மேலும், அருகில் இருந்தவர்கள் சுசீலாவுக்கு கரோனா இருக்குமோ என்ற அச்சத்தில் யாரும் உதவ முன் வரவில்லை. அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்தனர். இதனிடையே, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த காட்டூரைச் சேர்ந்த இளையராணி என்பவர், இருசக்கர வாகனத்தை சாலையோரம் நிறுத்திவிட்டு, சுசீலாவை தூக்கி அவரது மகனின் இருசக்கர வாகனத்தில் அமர வைத்து அவரும் பின்னால் அமர்ந்து சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல உதவினார்.
இளையராணி உதவிய இச்செயல் சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில், கரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்ய நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் காமலாபுரம் வந்த முதல்வர் ஸ்டாலின், விமான நிலையத்தில் இளையராணியை சந்தித்து, அவருக்கு புத்தகம் வழங்கி அவரது உதவும் உள்ளத்தை பாராட்டினார்.