

பெருந்துறை சிப்காட்டில் பயன்படுத்தாத புதிய கட்டிடங்களை, கரோனா தனிமை வார்டாக பயன்படுத்தவேண்டும், என மாவட்ட ஆட்சியருக்கு பெருந்துறை எம்.எல்.ஏ எஸ்.ஜெயக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக ஆட்சியரிடம் அவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பல்வேறு விரிவாக்கப் பணிகள் மூலம், கூடுதலாக கரோனா நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற பணிகள் நடைபெற்று வருகின்றன. இருப்பினும், நோய் பரவலைக் கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட வேண்டியுள்ளது. .
தற்போது பெருந்துறை சிப்காட் வளாகத்தில் 100 ஏக்கர் பரப்பளவில், ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் கட்டப்பட்ட 200 புதிய கட்டிடங்கள், பயன்படுத்தாமல் உள்ளது. தண்ணீர் மற்றும் கழிப்பறை வசதியுடன் பல வருடங்களாக பயன்பாடு இல்லாமல் இருந்து வருகிறது. இதனை போர்க்கால அடிப்படையில் சீரமைத்து, பயன்பாட்டுக்கு கொண்டுவந்தால் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகளைத் தங்க வைத்து, தனிமைப் படுத்திக்கொள்ள வாய்ப்புள்ளது. எனவே, மாவட்ட ஆட்சியர் இந்த கட்டிடங்களை ஆய்வு செய்து, எனது கோரிக்கையினை பரிசீலனை செய்ய வேண்டும்.
மேலும், கோவை- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் விடுதிகளை கரோனா சிகிச்சைக்கு பயன்படுத்த வேண்டும். பெருந்துறை அரசு மருத்துவமனையில் படுக்கை வசதி கிடைக்காத நோயாளிகளுக்கு, முதலுதவி மையம் அமைக்கவேண்டும்.
மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், பணி யாளர்களுக்கு முறையான ஓய்வு வழங்க வேண்டும். அதற்காக கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் நியமிக்க வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.