கட்சி அலுவலகத்தில் நடந்த கரோனா ஆலோசனை கூட்டத்தில் - அதிகாரிகள் பங்கேற்றது திட்டமிடப்பட்டது அல்ல : அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி கருத்து

கட்சி அலுவலகத்தில் நடந்த கரோனா ஆலோசனை கூட்டத்தில்  -  அதிகாரிகள் பங்கேற்றது திட்டமிடப்பட்டது அல்ல  :  அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி கருத்து
Updated on
1 min read

திமுக கட்சி அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற கரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில், ஆட்சியர், காவல் ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டது திட்டமிடப்பட்டது அல்ல என மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டத்தில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை தொடர்பாகவும், அரசு மருத்துவமனைக்கு தேவையான அளவு ஆக்சிஜன் வழங்குவது தொடர்பாகவும், திருச்சி வி.என்.நகரில் உள்ள திமுக தெற்கு மாவட்ட அலுவலகத்தில் மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்டப் பொறுப்பாளராகவும் உள்ள அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று முன்தினம் லயன்ஸ், ரோட்டரி சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் எஸ்.திவ்யதர்ஷினி, மாநகர காவல் ஆணையர் ஏ.அருண், மாநகராட்சி ஆணையர் சு.சிவசுப்பிரமணியன் ஆகியோரும் கலந்து கொண்டதாகவும், இது இந்திய இறையாண்மைக்கு எதிராக இருப்பதுடன், ஜனநாயக கேலிகூத்தாகவும் இருப்பதால், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை பதவி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் எம்பி-யும், அதிமுக திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளருமான ப.குமார், தமிழக ஆளுநருக்கு நேற்று புகார் மனு அனுப்பினார்.

இதனிடையே, அக்கூட்டம் திட்டமிட்டு நடத்தப்படவில்லை என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கரோனா பேரிடரை சமாளிக்க உதவக் கோரி திருச்சியில் செயல்பட்டு வரும் பொது நலச் சங்க நிர்வாகிகளுடன், கட்சி அலுவலகத்தில் மே 17-ம் தேதி உரையாடிக் கொண்டிருந்தேன்.

அந்த நேரத்தில், புதிதாக அமைச்சராக பொறுப்பேற்ற எனக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையர், மாநகராட்சி ஆணையர் ஆகியோர் அங்கு வந்தனர்.

அப்போது அவர்கள் சில கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். மற்றபடி, அக்கூட்டம் முன்னரே திட்டமிட்டு அதிகாரிகளை வரவழைத்து நடத்தப்பட்ட கூட்டம் அல்ல. அரசு ஊழியர் என்ற முறையில், கட்சி அலுவலகத்தில் அக்கூட்டத்தை நடத்தக் கூடாது என்பதை நான் நன்கு அறிவேன்’’ என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in