Published : 17 May 2021 03:15 AM
Last Updated : 17 May 2021 03:15 AM

நெல்லை உட்பட 4 மாவட்டங்களில் - தளர்வில்லா ஊரடங்கை முழு அளவில் கடைபிடித்த மக்கள் : கடைகள் அடைப்பு, சாலைகள் வெறிச்சோடின

தளர்வில்லா ஊரடங்கு காரணமாக குற்றாலத்தில் வெறிச்சோடி காணப்பட்ட கடை வீதி . (வலது) பாளையங்கோட்டை- திருச்செந்தூர் சாலை வாகனப் போக்குவரத்தின்றி வெறிச்சோடியது. (கடைசிபடம்) தூத்துக்குடி விவிடி சந்திப்பு பகுதியில் முழு ஊரடங்கை மீறி சாலையில் சுற்றித் திரிந்தவர்களை தடுத்து நிறுத்தி எஸ்பி ஜெயக்குமார் அறிவுரை வழங்கினார். படங்கள்: மு.லெட்சுமி அருண், என்.ராஜேஷ்

திருநெல்வேலி/தென்காசி/ தூத்துக்குடி/நாகர்கோவில்

கரோனா இரண்டாவது அலையின் வேகம் அதிகரிக்கத் தொடங்கியதால் கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் இருந்து ஞாயிறு தோறும் தளர்வில்லா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

தளர்வில்லா ஊரடங்கு நாளான நேற்று மருந்து, பால் கடைகளைத் தவிர மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. திருநெல்வேலி- திருவனந்தபுரம் சாலை, சுவாமி நெல்லையப்பர் நெடுஞ்சாலை, வண்ணார்பேட்டை தெற்கு மற்றும் வடக்கு புறவழிச்சாலை உள்ளிட்ட சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

உணவகங்களில் பார்சல் மட்டுமே விநியோகிக்கப்பட்டது. இருப்பினும் ஒரு சில உணவகங்களே திறந்திருந்தன. விக்கிரமசிங்கபுரம், அம்பாசமுத்திரம், களக்காடு, வள்ளியூர், நாங்குநேரி உட்பட மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் வாகனப் போக்குவரத்து அடியோடு முடங்கியது.

தாழையூத்து, பழையபேட்டை, கருங்குளம், டக்கரம்மாள்புரம், வசவப்பபுரம் உள்ளிட்ட சோதனைச் சாவடிகளில் ஆவணங்களை சோதனை செய்த பின்னரே வாகனங்களை போலீஸார் அனுமதித்தனர். இதுதவிர வண்ணார்பேட்டை, கே.டி.சி. நகர் உள்ளிட்ட இடங்களில் தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைத்தும் போலீஸார் கண்காணித்தனர்.

இதேபோல், தென்காசி மாவட்டத்தில் உள்ள 9 சோதனைச் சாவடிகளிலும் போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். சாலைகளில் வாகனங்களில் சென்றவர்களை நிறுத்தி, விசாரணை நடத்தி, அத்தியாவசிய தேவைக்காக வந்தவர்களை மட்டும் அனுமதித்தனர் மற்றவர்களை எச்சரித்து திருப்பி அனுப்பினர். தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், புளியங்குடி, சங்கரன்கோவில், சுரண்டை, பாவூர்சத்திரம், ஆலங்குளம் உட்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. வாகனப் போக்குவரத்தின்றி சாலைகள் வெறுமையாக காணப்பட்டன.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் நேற்று கடைகள், வணிக நிறுவனங்கள் எதுவும் திறக்கப்படவில்லை. ஒருசில மருந்துக் கடைகள் மற்றும் பால் கடைகள் மட்டும் திறந்திருந்தன. வாகனங்கள் இயங்காததால் அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டன.

இருசக்கர வாகனங்களில் வந்த சிலரை காவல் துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்தனர். சில இடங்களில் வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்தனர்.

தூத்துக்குடி புதிய பேருந்து நிலைய பகுதி மற்றும் விவிடி சந்திப்பு ஆகிய இடங்களில் எஸ்பி ஜெயக்குமார் ஆய்வு செய்தார். அப்போது சாலையில் வந்தவர்களை நிறுத்தி அறிவுரைகள் வழங்கியதுடன், கபசுர குடிநீர் வழங்கினார்.

செய்தியாளர்களிடம் எஸ்பி கூறும்போது, “மாவட்டம் முழுவதும் முழு ஊரடங்கை கண்காணிக்கும் பணியில் 2,000 போலீஸார் ஈடுபட்டுள்ளனர். 65 இடங்களில் வாகன சோதனை நடத்தப்படுகிறது. மாவட்டத்தில் இதுவரை முகக்கவசம் அணியாதவர்கள் மீது 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகளும், சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்கள் மீது 600 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு, ரூ.86 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது” என்றார்.

கோவில்பட்டி

கோவில்பட்டி கோட்டத்தில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. மருந்து, பால் கடைகள் திறந்திருந்தன. அரசின் கரோனா சிறப்பு நிதி வழங்க நியாய விலைக்கடைகள் திறந்திருந்தன. முக்கிய இடங்களில் போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். சாலைகளில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை நிறுத்தி விசாரித்து, காரணமின்றி வந்தவர்களுக்கு போலீஸார் அபராதம் விதித்தனர்.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில், கன்னியாகுமரி, மார்த்தாண்டம், தக்கலை, குலசேகரம், குளச்சல், கருங்கல், களியக்காவிளை, திங்கள்நகர், ஆரல்வாய்மொழி உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மற்றும் கிராமப்புற பகுதிகளில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. வாகனப் போக்குவரத்தின்றி சாலைகள் வெறிச்சோடின.

அத்தியாவசிய தேவைகளுக் காக மட்டும் ஆம்புலன்ஸ் மற்றும் முன்களப் பணி தொடர்பான வாகனங்கள் இயங்கின. கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரை எஸ்.பி. பத்ரிநாராயணன் தலைமையில் தீவிர கண்காணிப்பு பணியில் போலீஸார் ஈடுபட்டனர். மக்கள் வீடுகளில் முடங்கியதால் அமைதியான சூழல் நிலவியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x