Published : 17 May 2021 03:15 AM
Last Updated : 17 May 2021 03:15 AM

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் - முழு ஊரடங்கு காரணமாக வெறிச்சோடிய சாலைகள் : தடுப்புகள் அமைத்து காவல் துறையினர் தீவிர கண்காணிப்பு

வேலூர்/ராணிப்பேட்டை/திருப்பத்தூர்

தளர்வுகளற்ற முழு ஊரடங்கை யொட்டி ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலைகள் பொதுமக்கள் நடமாட்டமின்றி நேற்று வெறிச்சோடி காணப்பட்டது.

தமிழகத்தில் பெருகி வரும் கரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம் என சுகாதாரத்துறையினர் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அதன்படி, கடந்த 10-ம் தேதி முதல் வரும்24-ம் தேதி வரை முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 6 மணி முதல் 10 மணி வரை காய்கறி, மளிகை உள்ளிட்ட கடைகள் திறக்க அனுமதியளிக் கப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு கடைப்பிடிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டது. அதன்படி, நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் முழு ஊரடங்கு நடைமுறைக்கு வந்தது. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் முக்கிய சாலைகளில் தடுப்புகளை அமைத்த காவல் துறையினர் தீவிர கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டனர். வேலூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கை யொட்டி 800-க்கும் மேற்பட்ட காவலர்கள் நகர் முழுவதும் கண் காணிப்புப்பணியில் ஈடுபட்டனர்.

வேலூர் கிரீன் சர்க்கிள், செல்லியம்மன்கோயில், பேலஸ்கபே, பழைய பேருந்து நிலையம், அண்ணா சாலை சந்திப்பு, டோல்கேட், தொரப்பாடி எம்ஜிஆர் சிலை, பாகாயம், வேலப்பாடி, ஆரணி ரோடு, ரவுன்டானா, ஆட்சியர் அலுவலகம், சத்துவாச்சாரி, வள்ளலார், அலமேலுமங்காபுரம், விருதம்பட்டு, சித்தூர் பேருந்து நிலையம், குடியாத்தம் கூட்டுச்சாலை, வள்ளிமலை கூட்டுச்சாலை உள்ளிட்ட பகுதி களில் தடுப்புகள் அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

வேலூர் மாவட்டத்தில் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் கண்காணிப்பு நேற்று கடுமையாக்கப்பட்டது. அவசிய மின்றி இரு சக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்தவர்களை எச்சரித்த காவல் துறையினர் ஒரு சிலரிடம் இருந்து வாகனங்களை பறிமுதல் செய்தனர். வேலூர் மாநகர் பகுதி யில் மட்டும் நேற்று ஒரே நாளில் 500-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

அதேபோல, ஞாயிற்றுக் கிழமைகளில் இறைச்சிக்கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், வேலூர், சத்துவாச்சாரி, காட்பாடி, தொரப்பாடி, ஓட்டேரி, விருபாட்சிபுரம், சங்கரன் பாளையம், வேலப்பாடி உள் ளிட்ட பகுதிகளில் இறைச்சி விற்பனை நேற்று வழக்கம்போல நடைபெற்றது. இது தொடர்பாக வந்த புகாரின் பேரில் அங்கு சென்ற மாநகராட்சி அதிகாரிகள் தடையை மீறி விற்பனை செய்யப்பட்ட 130 கிலோ இறைச்சியை பறிமுதல் செய்து, 15-க்கும் மேற்பட்ட இறைச்சிக்கடைகளுக்கு ‘சீல்' வைத்து, அபராதம் விதித்தனர்.

மருத்துவமனை, அத்தியாவசிய தேவைக்காக சென்றவர்களை காவல் துறையினர் விசாரணை செய்து அனுப்பி வைத்தனர். கிராமப்பகுதிகளில் இளைஞர்கள் இரு சக்கர வாகனத்தில் வலம் வந்தபடியே இருந்தனர். அதே போல, கிராமப்பகுதிகளில் காய்கறி, மளிகை உள்ளிட்ட ஒரு சில கடைகள் நேற்று திறக்கப் பட்டிருந்தன.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் முழு ஊரடங்கையொட்டி 500-க்கும் மேற்பட்ட காவலர்கள் மாவட்டம் முழுவதும் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். ராணிப்பேட்டை முத்துக்கடை, வாலாஜா சுங்கச் சாவடி, ஆற்காடு பேருந்து நிலையம், சோளிங்கர் மற்றும் அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளில் காவல் துறையினர் தீவிர கண் காணிப்புப்பணியில் ஈடுபட்டனர். சாலைகளில் விதிமுறைகளை மீறி சுற்றித்திரிந்தவர்களிடம் இருந்து வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

முழு ஊரடங்கையொட்டி ராணிப் பேட்டை முத்துக்கடை பகுதியில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி நேற்று ஆய்வு மேற்கொண்டு காவல் துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.

திருப்பத்தூர் மாவட் டத்தில், வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இறைச்சிக் கடைகள் நேற்று திறக்கப்பட்டன. இதுதொடர்பாக வந்த புகாரை தொடர்ந்து வருவாய்த் துறையினர் அங்கு சென்றபோது கடைக்காரர்கள் கடையை மூடிவிட்டு சென்றனர். திருப்பத்தூர், நாட்றாம்பள்ளி, ஜோலார்பேட்டை பகுதிகளில் முக்கிய சாலை சந்திப்புகளில் தடுப்புகளை அமைத்த காவல் துறையினர் அவ் வழியாக வந்த வாகன ஓட்டிகளை மடக்கி விசாரித்து அவசியமாக வெளியே வந்தவர்களை மட்டும் அனுமதித் தனர். அவசியமில்லாமல் வெளியே வந்தவர் களை எச்சரித்து திருப்பி அனுப்பினர்.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கை யொட்டி அனைத்து முக்கிய சாலைகளும் பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடியே காணப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x