

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள், கரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை, படுக்கை வசதி, ஆக்சிஜன் வசதி, உணவு உள்ளிட்ட வசதிகளை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜ கண்ணப்பன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது காணொலி மூலம் கரோனா வார்டில் சிகிச்சை பெறும் நோயாளியுடன் மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சை, உணவு வசதிகள் குறித்து கேட்டார்.
அப்போது மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு முறையாக சிகிச்சை அளிக்கவில்லை, உணவு சரியாக வழங்கப்படுவதில்லை. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோயாளிகளின் உறவினர்கள் கூறினர். அமைச்சரும் அவர்களின் குறைகளை கேட்டு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். பின்னர் அமைச்சர் ராஜ கண்ணப்பன் ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மருத்துவம், சுகாதாரம் உட்பட பல்வேறு துறைகளின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும், அனைத்துத் துறையினரும் ஒருங்கிணைந்து கரோனாவை ஒழிக்கப் பாடுபட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை. அரசு மருத்துவமனைகளில் போதிய மருந்து, மாத்திரைகள் இருப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.