‘ஆல் பாஸ்’ அறிவிப்பால் கிடைக்கும் பாராட்டு முக்கியமல்ல - மாணவர்களின் எதிர்காலமே முக்கியம் : அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கருத்து
‘ஆல் பாஸ்’ அறிவிப்பால் கிடைக் கும் மாணவர்களின் பாராட்டு முக்கியமல்ல. அவர்களது எதிர் காலம் கேள்விக்குறியாகிவிடக் கூடாது என்பதே முக்கியம் என மாநில பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
திருச்சி திருவெறும்பூர் காவேரி நகர், காட்டூர் பர்மா காலனி, அரியமங்கலம் உக்கடை, திருச்சி வரகனேரி, மணப்பாறையை அடுத்த கோவில்பட்டி ஆகிய ரேஷன் கடைகளில் மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று அரிசி ரேஷன் கார்டுதார்களுக்கு அரசின் கரோனா நிவாரண நிதியின் முதல் தவணை வழங்கும் பணியை தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கரோனா பரவல் குறைந்த பிறகே பிளஸ் 2 தேர்வை நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்படும். ஆசிரியர்கள், கல்வித் துறை அலுவலர்கள், மாணவ - மாணவிகள், கல்வியாளர்கள் ஆகியோருடன் நடத்தப்பட்ட ஆலோசனையில், பிளஸ் 2 தேர்வு கண்டிப்பாக நடத்த வேண்டும் என்றுதான் அனைத்துத் தரப்பினரும் வலியுறுத்தினர். அனைவரும் தேர்ச்சி என்று அறிவித்துவிட முடியும். அதற்காக மாணவர்கள் அனைவரும் பாராட்டுவர். ஆனால், அவர்களது பாராட்டு முக்கியமல்ல. ஏனெனில், தேர்வு நடத்தாமல் அனைவரும் தேர்ச்சி என்பதை பல்கலைக்கழகங்களோ, நீதிமன்றமோ ஏற்காவிட்டால் என்ன செய்ய முடியும். எனவே, மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடக் கூடாது என்பதால் மிகவும் யோசித்து கவனமாக முடிவெடுக்க வேண்டியுள்ளது. இதுதொடர்பாக எங்களது ஆலோசனைகளை முதல்வரிடம் தெரிவித்துள்ளோம். அவரது அறிவுறுத்தலின்படி ஊரடங்கு முடிந்த பிறகு நல்ல முடிவு அறிவிக்கப்படும் என்றார்.
நிகழ்ச்சிகளில், மாவட்ட வருவாய் அலுவலர் த.பழனிகுமார், எம்எல்ஏக்கள் எஸ்.இனிகோ இருதயராஜ்(திருச்சி கிழக்கு), பி.அப்துல் சமது (மணப்பாறை), முன்னாள் எம்எல்ஏ கே.என்.சேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதனிடையே, புதுக்குடியில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படும் தனியார் தொழிற்சாலையையும், திருச்சி என்ஐடி-யில் அமைக்கப்பட்டுள்ள கரோனா தனிமைப்படுத்தப்பட்ட முகாமையும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
