Published : 16 May 2021 03:17 AM
Last Updated : 16 May 2021 03:17 AM

பாவூர்சத்திரம் காய்கறி சந்தை மூடல் - விளைபொருட்களை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் பாதிப்பு :

பாவூர்சத்திரம் காய்கறி சந்தை நேற்று மூடப்பட்டது.

தென்காசி

பாவூர்சத்திரம் சந்தை மூடப் பட்டதால் விளைபொருட்களை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டு ள்ளனர்.

தென்காசி மாவட்டம், பாவூர் சத்திரத்தில் உள்ள காமராஜர் தினசரி காய்கறி சந்தைக்கு கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்தும், தென் மாவட்டங்களில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன. கேரள மாநிலத்தில் இருந்தும் தென் மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் ஏலத்தில் காய்கறிகளை வாங்கிச் சென்று சில்லறை விலைக்கு விற்பனை செய்கின்றனர்.

கரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் காய்கறி கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில், ஊரடங்கில் மேலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு நேற்று முதல் காய்கறி, இறைச்சி, மீன் கடைகள் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரையே அனுமதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பாவூர்சத்திரம் சந்தையில் உள்ள மொத்த விற்பனைக் கடைகள் மட்டும் இரவு வரை செயல்பட அனுமதிக்கப் பட்டது. இந்நிலையில், மற்ற கடைகளைப் போல் சந்தையில் உள்ள மொத்த விற்பனை கடைகளும் நேர கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என்று அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதனால், பாவூர்சத்திரம் சந்தை நேற்று முதல் மூடப்பட்டுள்ளது.

இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, “விவசாய நிலங்களில் இருந்து காய்கறிகளை அறுவடை செய்து, மாலை 6 மணிக்கு மேலும் விற்பனைக்கு அவற்றை விவசாயிகள் கொண்டு வருவார்கள். மற்ற கடைகளைப் போல் மொத்த விற்பனை காய்கறி கடைகளுக்கும் கட்டுப்பாடுகள் விதித்தால் காய்கறிகளை கொள்முதல் செய்து, ஏலம் விட்டு, லாரிகளில் லோடு ஏற்றி அனுப்ப முடியாது. காய்கறிகள் டன் கணக்கில் தேக்கம் அடையும். எனவே, மறு உத்தரவு வரும் வரை சந்தையில் உள்ள அனைத்து கடைகளையும் ஒட்டுமொத்தமாக மூட வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர்” என்றனர்.

பாவூர்சத்திரம் சந்தைக்கு வரும் காய்கறிகளில் பெரும்பாலானவை கேரள மாநிலத்துக்கு செல்கின்றன. இந்த சந்தையால் ஏராளமான விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். சந்தை மூடப்பட்டதால் காய்கறிகளை அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. செடிகளிலேயே காய்கறிகள் வீணாகிவிடும் நிலை உள்ளது. ஏற்கெனவே இடுபொருட்கள் விலை உயர்வு, விளைபொருட்களுக்கு போதிய விலை விலை கிடைக்காமை போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள், தற்போது காய்கறிகளை விற்பனை செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் மதியம் 12 மணிக்கே சந்தை மூடப்பட்டதால் தேங்கிய காய்கறிகளை தன்னார் வலர்களுக்கு வியாபாரிகள் இலவசமாக வழங்கினர். தன்னார் வலர்கள் சரக்கு ஆட்டோக்களில் காய்கறிகளை ஏற்றிச் சென்று, கீழப்பாவூர் உட்பட பல்வேறு பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x