Published : 15 May 2021 03:13 AM
Last Updated : 15 May 2021 03:13 AM

ஈரோடு அரசு மருத்துவமனையில் - கரோனா சிகிச்சைக்கான வசதிகள் செய்ய தன்னார்வலர்களுக்கு அமைச்சர் அழைப்பு :

ஈரோடு

அரசு மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கான வசதிகளை மேம்படுத்த தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் முன்வந்து உதவ வேண்டும் என அமைச்சர் சு.முத்துசாமி வேண்டுகோள் விடுத்தார்.

ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைப்பது குறித்தும் வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தற்போதுள்ள ஆக்சிஜன் தட்டுப்பாட்டினை கருத்தில் கொண்டு, ஈரோடு பி.என்.ஐ மற்றும் டெக்ஸ்வேலி நிறுவனம் சார்பில், ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் ஆக்சிஜன் ஜெனரேட்டர் இயந்திரம் வழங்கப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து தன்னார்வலர்களும் முன்வந்து, அரசு மருத்துவமனைகளுக்கு இதுபோன்ற உதவிகளை செய்ய வேண்டும். ஆக்சிஜன் இயந்திரத்தின் மூலம், தொடர்ச்சியாக 40 நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்க இயலும். மேலும், இதனை 60 முதல் 100 நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்கும் வகையில் மேம்படுத்த இயலும். புதிய இயந்திரம் மூலம் நிமிடத்திற்கு 200 லிட்டர் ஆக்சிஜன் வழங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

நேரிடையாக பைப்லைன் மூலமாக நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்கப்படுவதால், சிலிண்டர்களின் தேவைகளும் குறையும்.

ஈரோடு அரசு மருத்துவமனையில் பொதுநோயாளிகள் செல்ல தனி வழியும், கரோனா நோயாளிகள் மற்றும் 108 அவசர ஊர்தி சென்று வர தனி வழியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், கரோனா சிகிச்சைக்காக கூடுதலாக 150 படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கரோனா சிகிச்சை மையங்களில் சித்தா மருந்தும் வழங்கப்பட்டு வருகிறது. கரோனா அறிகுறி உள்ளவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்வதற்காக, மாவட்டம் முழுவதும் 10 இடங்களில் மையங்கள் அமைக்கப்படும். இதன் மூலம் மருத்துவமனைகளில் பொது நோயாளிகளிடம் தொற்று பரவல் ஏற்படாது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன், எஸ்பி பி.தங்கதுரை, மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன், மாநகராட்சி ஆணையர் மா.இளங்கோவன், மாநகர நல அலுவலர் முரளிசங்கர், மாநகராட்சி செயற்பொறியாளர் விஜயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x