

அரசு நிர்ணயம் செய்துள்ள வாடகைக்கு மேல் தனியார் ஆம்புலன்ஸ்களில் வாடகை வசூலிக்கப்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என ஈரோடு ஆட்சியர் சி.கதிரவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஈரோடு மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சுகாதாரத்துறை சார்பில், தனியார் ஆம்புலன்ஸ்களுக்கு வாடகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, பிடிஏ வகை ஆம்புலன்ஸ்களுக்கு முதல் 10 கி.மீட்டருக்கு ரூ.1500 மற்றும் அதன் பின் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் தலா ரூ.25 வீதம் வசூலிக்கலாம். ஆக்சிஜன் உள்ளிட்ட உயிர்காக்கும் கருவிகளுடன் கூடிய ஆம்புலஸ்கள், முதல் 10 கி.மீட்டருக்கு ரூ.2000 மற்றும் கூடுதலாக இயக்கப்படும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.50 வீதமும், வெண்டிலேட்டர் உள்ளிட்ட நவீன உயிர்காக்கும் கருவிகளுடன் கூடிய ஆம்புலன்ஸ்கள் முதல் 10 கிலோ மீட்டருக்கு ரூ.4000 மற்றும் அடுத்த ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் ரூ.100 வீதமும் கட்டணம் வசூலிக்கலாம்.
அரசாணையில் அரசு நிர்ணயித்துள்ள இந்த வாடகைத் தொகைக்கு மேல் தனியார் ஆம்புலன்ஸ்கள் வாடகை வசூல் செய்தால், ஓட்டுநர் உரிமம் உடனடியாக ரத்து செய்யப்படும். மேலும், ஆம்புலன்ஸ் பதிவு எண் ரத்து செய்யப்பட்டு, அவ்வாகனம் உடனடியாக பறிமுதல் செய்யப்படும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.