வஉசி மார்க்கெட்டை தனியார் பள்ளிக்கு மாற்ற எதிர்ப்பு - சேலம் சின்னக்கடை வீதியில் காய்கறி கடைகள் செயல்பட அனுமதி :
சேலம் வஉசி மார்க்கெட் தனியார் பள்ளிக்கு மாற்றும் நடவடிக்கைக்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சேலம் வஉசி மார்க்கெட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் இயங்கி வருகின்றன. இங்கு புதுப்பிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், கடைவீதி பகுதிக்கு காய்கறி கடைகள் மாற்றப்பட்டன. தற்போது, கரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், சேலம் அரசு மருத்துவமனைக்கு எதிரே உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் காய்கறி மார்க்கெட்டை மாற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
ஆனால் இங்கு குறைவான இடமே உள்ளதாகவும், அரசு மருத்துவமனையில் கரோனா தொற்று நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மிக அருகாமையில் உள்ள தனியார் பள்ளியில் காய்கறி மார்க்கெட் மாற்றப்பட்டுள்ளதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டனர்.
இந்நிலையில் நேற்று கடை வீதியில் இருந்த காய்கறி மார்க்கெட்டை மாநகராட்சி அதிகாரிகள் அப்புறப்படுத்தி, தனியார் பள்ளிக்கு மாற்றிட நடவடிக்கை எடுத்தனர்.
இதற்கு காய்கறி வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்தனர். சேலம் வடக்கு தொகுதி திமுக எம்எல்ஏ ராஜேந்திரனிடம், காய்கறி மார்க்கெட் சின்னக் கடை வீதியில் செயல்பட அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, எம்எல்ஏ ஆலோசனையின் பேரில், காய்கறி கடைகள் சின்னக் கடை வீதி பகுதியில் இயங்கிட சேலம் மாநகராட்சி அதிகாரிகள் அனுமதி வழங்கினர்.
