

அட்சய திருதியை நாளில் குழந்தை திருமணம் நடைபெறுவதாக தகவல் கிடைத்தால், குழந்தைகள் உதவி எண், காவல்துறை உள்ளிட்டோரிடம் தகவல் தெரிவிக்கும்படி சென்னை மாவட்ட ஆட்சியர் ஆர்.சீதாலட்சுமி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
குழந்தை திருமண தடுப்புச் சட்டப்படி 18 வயது நிறைவடையாத பெண்ணும் 21 வயது நிறைவடையாத ஆணும் செய்யும் திருமணம் சட்டப்படி குற்றமாகும்.
குழந்தை திருமணத்தை முன்னின்று நடத்துபவர்கள், வழிகாட்டுபவர்கள், துணை போகிறவர்கள், ஆதரிப்பவர்கள் மற்றும் மறைப்பவர்களுக்கு 2 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனையும் ரூ,1 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும்.
அட்சய திருதியை தினத்தை ஒட்டி ஆண்டுதோறும் குழந்தை திருமணம் அதிகமாக நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. அதன்படி இன்று (மே 14) அட்சய திருதியை தினத்தை முன்னிட்டு குழந்தை திருமணம் நடைபெறாவண்ணம் தடுத்து நிறுத்தும் வகையில் பொதுமக்கள் தங்கள் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குழந்தை திருமணம் நடைபெறுவதாகத் தகவல் கிடைத்தால், குழந்தை திருமண தடுப்பு அல்லது மாவட்ட சமூக நல அலுவலர், காவல்துறை, முதல் வகுப்பு நீதிபதி, பெருநகர நீதிபதி, குழந்தைகள் நலக் குழுமம், குழந்தைகள் ஹெல்ப்லைன் ‘1098’, ஊராட்சி அளவிலான கண்காணிப்புக் குழு அலுவலர்கள் ஆகியோரிடம் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.