

அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் காலை 9 மணிக்கே கரோனா தடுப்பூசிப் போட உத்தரவிடப்பட்டுள்ளதாக, விழுப்புரத்தில் நேற்று ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா நடவடிக்கைகள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று காலை நடைபெற்றது. உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தலைமை தாங்கினார். சிறுபான்மை நலத் துறை அமைச்சர் மஸ்தான் முன்னிலை வகித்தார். ஆட்சியர் அண்ணாதுரை வரவேற்றார். எஸ்பி ராதாகிருஷ்ணன், துரை.ரவிக்குமார் எம்பி., எம்எல்ஏக்கள் புகழேந்தி, லட்சுமணன், மணிக்கண்ணன், சிவக்குமார், சுகாதார பணிகள் துணை இயக்குநர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி பேசியதாவது:
முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் தடுப்பூசி இல்லை என்று ஒருவர் என்னிடம் தகவல் தெரிவித்தார். உடனே சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனை தொடர்பு கொண்டு கேட்டுக் கொண்டதன் பேரில் இன்று (நேற்று) தடுப்பூசி வந்துள்ளது. மற்றவர்கள் தகவல் தெரிவிப்பதற்கு முன்பாகவே அலுவலர்கள் முன்கூட்டியே மக்கள் பிரதிநிதிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் அதனை உடனே நிவர்த்தி செய்ய வசதியாக இருக்கும்.
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலை 11 மணிக்குமேல்தான் தடுப்பூசி போடப்படுவதாக செய்தி வெளியாகியுள்ளது. தற்போது முழு ஊரடங்கு காலம் என்பதால் 12 மணிக்கு மேல் மக்கள் வெளியே வரக்கூடாது. எனவே அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலை 9 மணிக்கெல்லாம் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.
விழுப்புரம் சரக டிஐஜியும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். எனவே அலுவலர்கள் விழிப்புணர்வுடனும், பாதுகாப்பாகவும் இருந்தால்தான் மக்களும் விழிப்புணர்வுடனும் பாதுகாப்பாகவும் இருப்பார்கள் என்று தெரிவித்தார்.
பின்னர் லட்சுமணன் எம்எல்ஏ பேசுகையில், ரயில்வே மருத்துவமனையை கரோனா சிறப்பு மருத்துவமனையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுதெரிவித்தார்.
இதனை தொடந்து முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் அமைச்சர்கள் மற்றும் அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களிடம் கூறியது:
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலை 9 மணிக்கு தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பல்ஸ் ஆக்சி மீட்டரை ஒவ்வொரு குடும்பத்தினரும் வாங்கி வைத்துக்கொண்டு, ஆக்சிஜன் அளவை பரிசோதனை செய்து கொண்டு சிகிச்சைக்கு வர வேண்டும். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று (நேற்று) மேலும் 200 படுக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மொத்தத்தில் 660 படுக்கைகள் உள்ளன. நகாய் மூலம் ஆக்சிஜன்சிலிண்டர்களை கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது. அது வந்துவிட்டால் ஆக்சிஜன் பற்றாகுறை தீர்ந்துவிடும். தடுப்பூசிக்கு பதிலாக மாத்திரைகள் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் விரைவில் வழங்கப்பட உள்ளன என்றார்.