

புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத் தில் கரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி பேசினார்.
பின்னர், சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி பேசியது: மருத்துவமனைகளில் நூற்றுக்கணக்கில் காலிப்படுக்கைகள் இருப்பதாக அலுவலர்கள் அறிக்கை கொடுக்கிறார்கள். ஆனால், படுக்கைகளே இல்லை என பொதுமக்களிடம் இருந்து புகார் வருகிறது. எனவே, இதிலுள்ள முரண்பாடுகளை அலுவலர்கள் களைய வேண்டும். அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளை காத்திருக்க வைக்காமல் விரைந்து சேர்த்து, சிகிச்சை அளிப்பதை மருத்துவர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றார்.
சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பேசியது: கரோனாவை கட்டுப்படுத்த உள்ளாட்சித் துறை அலுவலர்கள் மக்கள் பிரதிநிதிகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். முறையாக பணியாற்றாத உள்ளாட்சித் துறை அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட வேண்டும். மருத்துவமனைகளுக்கு வெளியே உதவி செய்வதற்காக தன்னார்வலர்கள், என்எஸ்எஸ், என்சிசி, சாரணர்கள் போன்றவர்களை குழுவாக அமைத்து சுழற்சி முறையில் பணியாற்ற அனுமதிக்கப்பட உள்ளார்கள் என்றார்.
கூட்டத்தில், மாவட்ட எஸ்.பி எல்.பாலாஜி சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், அறந்தாங்கி சார் ஆட்சியர் ஆனந்த் மோகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் சந்தோஷ்குமார், மருத்துவக் கல்லூரி முதல்வர் எம்.பூவதி, சுகாதார துணை இயக்குநர்கள் கலைவாணி, விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.