

அரசு மருத்துவமனைகளில் கரோனா வுக்கு சிகிச்சையளிக்க தற்காலிக மருத்துவர்கள், செவிலியர்களை தேர்வு செய்ய நாளை (மே 15) நேர் காணல் நடைபெறுகிறது.
திருச்சி மாவட்ட ஆட்சியர் எஸ்.திவ்யதர்ஷினி வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருச்சி மாவட்டத்தில் அரசு மருத்துவமனை மற்றும் கரோனா பாதுகாப்பு மையங்களில் சிகிச்சை அளிப்பதற்கு மருத்துவ அலுவலர்கள், செவிலியர்கள் கூடுதலாக தேவைப்படு கின்றனர்.
மருத்துவ அலுவலர்கள் பணிக்கு இந்திய மருத்துவ கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் முடித்து, தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். மாத ஊதியமாக ரூ.60,000 வழங்கப்படும்.
செவிலியர் பணிக்கு டிப்ளமோ அல்லது பிஎஸ்சி நர்சிங் முடித்து, நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். மாத ஊதியமாக ரூ.14,000 வழங்கப்படும். இப்பணியிடங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மே 15-ம் தேதி (நாளை) நேர்காணல் நடைபெறவுள்ளது. மருத்துவ அலுவலர்களுக்கு காலையும், செவிலியர்களுக்கு பிற்பகலிலும் நேர்காணல் நடைபெறும்.
இந்தப் பணியிடம் முற்றிலும் தற்காலிகமானது. பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது என தெரி விக்கப்பட்டுள்ளது.