

அரசு அறிவித்துள்ள கரோனா நிவாரண உதவித்தொகை ரேஷன் கடைகளில் பெற பொதுமக்களின் வீடுகளுக்கு சென்று ரேஷன் கடை ஊழியர்கள் டோக்கன் விநியோகம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியை சேலம் ஆட்சியர் ஆய்வு செய்தார்.
சேலம் சின்னத்திருப்பதி சுப்புராயன்கவுண்டர் தெரு பகுதியில் நடந்த டோக்கன் விநியோகப் பணியை ஆட்சியர் ராமன் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:
கரோனா நிவாரண உதவித்தொகை முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் ரேஷன் கடைகள் மூலம் வரும் 15-ம் தேதி முதல் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை வழங்கப்படும். இதற்கு முன்னேற்பாடாக கடந்த 10-ம் தேதி முதல் இன்று (நேற்று) வரை ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று டோக்கன் விநியோகம் செய்தனர்.
மாவட்டத்தில் மொத்தம் 1,591 ரேஷன் கடைகளில் 10,12,249 அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு கரோனா நிவாரண உதவித்தொகை முதல் தவணை ரூ.2,000 வழங்கப்படவுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர், மாவட்ட வழங்கல் அலுவலர் அமுதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.