

சேலம் மாநகராட்சிப் பகுதியில் இதுவரை 1.68 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது, என மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஆணையர் கூறியதாவது:
சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் கரோனா தடுப்புப் பணிகள் மற்றும் விழிப்புணர்வூட்டும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகராட்சிப் பகுதிகளில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம்கள், சளி தடவல் பரிசோதனை முகாம்கள் தினமும் 73 பகுதிகளில் நடத்தப்பட்டு வருகிறது.
ஏப்ரல் மாதம் முதல் இதுவரை 2,863 காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடத்தப்பட்டு 1 லட்சத்து 68 ஆயிரத்து 962 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம் 3,512 நபர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டு, அரசு மருத்துவமனை மற்றும் தற்காலிக சிகிச்சை மையங்களில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
குறைந்த அளவு தொற்று உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் மணியனூர் சட்டக்கல்லூரி வளாகத்தில் 128 படுக்கை வசதிகளுடனும், கோரிமேடு அரசினர் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கரோனா தற்காலிக சித்தா சிகிச்சை மையம் 100 படுக்கைகளுடனும், தொங்கும் பூங்கா பல்நோக்கு அரங்கில் 227 படுக்கைகளுடனும், மகாத்மா காந்தி விளையாட்டு அரங்கில் 146 படுக்கை வசதிகளுடன் தற்காலிக சிகிச்சை மையங்கள் மாநகராட்சியால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
சேலம் மாநகராட்சி பகுதியில் உள்ள கரோனா தற்காலிக சிகிச்சை மையங்களில் மொத்தம் 745 நபர்கள் சிகிச்சை பெற்று குணம் அடைந்துள்ளனர்.
மேலும், தில்லைநகர் பகுதியில் உள்ள ஐஐஎச்டி வளாகத்தில் ஆண்கள் விடுதி உட்பட பல்வேறு பகுதிகளில் கூடுதலாக தற்காலிக சிகிச்சை மையங்களை அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சிப் பகுதிகளில் தற்போது 51 பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, சுகாதார பணிகள், பாதுகாப்பு மற்றும் தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சேலம் மாநகர பகுதிகளில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1673 நபர்கள் பல்வேறு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும், தற்காலிக சிகிச்சை மையங்களிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.