

திருச்செங்கோடு கேபிள் டிவி ஆபரேட்டர் கொலை வழக்கில் 8 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
திருச்செங்கோடு பால்மடை பகுதியில் காவல் துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் அப்பகுதியில் சுற்றிய சிலரை காவல் துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சேலத்தைச் சேர்ந்த செல்வராஜ் (40), சங்ககிரி டோல் கேட்டைச் சேர்ந்த ஜெயராமன் (48), பள்ளிபாளையம் தேவனாங்குறிச்சியைச் சேர்ந்த சூர்யா (26), அர்ஜூன் (24), செங்கோடம்பாளையத்தைச் சேர்ந்தபால்ராஜ் (29), அவரது தம்பி மணிகண்டன்(26), கார்த்தி (27), பள்ளிபாளையம்மணிகண்டன் (27) எனத் தெரியவந்தது.
இவர்கள் 8 பேரும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் திருச்செங்கோடு எட்டிமடையைச் சேர்ந்த கேபிள் டிவி ஆபரேட்டர் வெங்கடாசலம் (எ) முருகேசன் (50) என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடையவர்கள் எனத் தெரியவந்தது.
மேலும், கடந்த 2011-ம் ஆண்டு தேவனாங்குறிச்சியில் நடந்த கொலை வழக்கில் ஜெயராமன் உள்ளிட்டோருக்கு தொடர்பிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து 8 பேரையும் கைது செய்த காவல் துறையினர் அவர்களை திருச்செங்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.