

கரோனா தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்டுள்ள 2 வார ஊரடங்கு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளதால், நண்பகல் 12 மணிக்குப் பிறகு திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூரில் சாலைகள் போக்குவரத்தின்றி வெறிச்சோடின.
தமிழகத்தில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மே 10-ம் தேதி முதல் மே 24-ம் தேதி அதிகாலை வரை முழு ஊரடங்கை அரசு அறிவித்துள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவு நேற்று முதல் அமலுக்கு வந்ததையடுத்து, திருச்சி மாவட்டத்தில் பேருந்துகள், ஆட்டோ, டாக்ஸி உள்ளிட்ட வாகனங்களின் போக்குவரத்து இல் லாமல் பேருந்து நிலையங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன. சாலைகளில் தனியார் கார்கள் குறைவாக இயங்கின.
அதேவேளையில், மக்களின் தேவைக்காக மளிகை, காய்கனி, இறைச்சிக் கடைகள் நண்பகல் 12 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டதால், இருசக்கர வாகனங்களின் போக்குவரத்து அதிகளவில் இருந்தது. இதேபோல, அம்மா உணவகங்கள் மற்றும் சில தனியார் உணவகங்கள், பால் பாக்கெட் கடைகள், மருந்தகங்கள், மருத்துவமனைகள் ஆகியவையும் செயல்பட்டன. பிற்பகல் 12 மணிக்குப் பிறகு மளிகை, காய்கனி, இறைச்சிக் கடைகளும் மூடப்பட்டதால், போக்குவரத்து எதுவுமின்றி சாலைகள் அனைத்தும் வெறிச்சோடின.
முழு ஊரடங்கையொட்டி மாந கரின் பல்வேறு இடங்களிலும் காலை முதலே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸார், தேவையின்றி வெளியே வந்த வர்களை எச்சரித்து அனுப்பினர். அதேவேளையில், பகல் 12 மணிக்குப் பிறகு தேவையின்றி வெளியே வந்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், முக்கிய இடங்களில் போலீஸார் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
இதேபோல, அரியலூர் மாவட்டத்தில் உள்ள முக்கியச் சாலைகள், கடைவீதிகள் நேற்று பகல் 12 மணிக்குப் பிறகு ஆள் நட மாட்டமின்றி வெறிச்சோடி காணப் பட்டன. மாவட்ட முழுவதும் உள்ள பிரதான சாலைகளில் போலீஸார் சோதனைச் சாவடி அமைத்து, வாகன சோதனையில் ஈடுபட்டனர். முன்களப் பணியாளர்கள், அத்தியாவசிய பணியாளர்களுக்கு மட் டும் அடையாள அட்டையை காண்பித்துச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. இதுதவிர, தேவையில்லாமல் வெளியே வந்தவர் களுக்கு அபராதம் விதித்து, வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டத்தில் வாகன போக்குவரத்து இல்லாத தால் பெரம்பலூரில் உள்ள புதிய, பழைய பேருந்து நிலையங்கள், கடைவீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. சாலைகளில் ஆங்காங்கே முகாமிட்டிருந்த போலீஸார், அத்தியாவசியமின்றி சுற்றித் திரிந்தவர்களுக்கு அறிவுரை கூறி, எச்சரித்து அனுப்பினர்.
கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பேருந்து நிலை யங்களும், சாலைகளும் வாகன போக்குவரத்தின்றி வெறிச் சோடின. கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் வாகன சோதனை நடத்திய போலீஸார் அவசியமின்றி வாகனங்களில் வந்தவர்களுக்கு அபராதம் விதித்தனர்.
கரூரில் 500-க்கும் மேற்பட்ட ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்படுகின்றன. இவற்றில், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
தொழில் நிறுவனங்கள் இயங்க தடை விதிக்கப்படாததால், கரூரில் உள்ள ஜவுளி உற்பத்தி ஏற்றுமதி நிறுவனங்கள் முழுமையாக செயல்பட்டன. ஊழியர்கள் தனி யார் வாகனங்கள் மூலம் அழைத்து வரப்பட்டனர்.