Published : 10 May 2021 06:25 AM
Last Updated : 10 May 2021 06:25 AM

நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் மழை :

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்துள்ளது. நேற்று முன்தினமும் பரவலாக மழை பெய்தது. நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் 45 மி.மீ. மழை பதிவானது.

தென்காசியில் 19.04 மி.மீ., ஆய்க்குடியில் 4.60, குண்டாறு அணையில் 2 மி.மீ. மழை பதிவானது. சுரண்டை, ஊத்துமலை, பாவூர்சத்திரம், கடையம் உட்பட பல்வேறு பகுதிகளில் நேற்றும் மழை பெய்தது.

இதேபோல், திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் 15.20 மி.மீ., கொடுமுடியாறு அணையில் 10, ராதாபுரத்தில் 8, மூலக்கரைப்பட்டியில் 7, திருநெல்வேலியில் 5, பாளையங்கோட்டையில் 2, களக்காட்டில் 2.40, மணிமுத்தாறு அணையில் 1.20 மி.மீ. மழை பதிவானது.

தொடர் மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோடை மழையை பயன்படுத்தி பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் மானாவாரி பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர்.

பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 49 கனஅடி நீர் வந்தது. அணையில் இருந்து 245 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. நீர்மட்டம் 100.90 அடியாக இருந்தது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 113.94 அடியாக இருந்தது. மணிமுத்தாறு அணைக்கு 12 கனஅடி நீர் வந்தது. 250 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. நீர்மட்டம் 86.80 அடியாக இருந்தது. வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் 42.66 அடியாகவும், நம்பியாறு அணை நீர்மட்டம் 12.53 அடியாகவும், கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 5 அடியாகவும் இருந்தது.

தென்காசி மாவட்டம், கடனாநதி அணையில் நீர்மட்டம் 66.40 அடியாகவும், ராமநதி அணையில் 55 அடி, கருப்பாநதி அணையில் 49.21 அடி, குண்டாறு அணையில் நீர்மட்டம் 28.50 அடியாகவும் இருந்தது. அடவிநயினார் அணை தொடர்ந்து வறண்ட நிலையில் உள்ளது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் சுமார் 1 மணி நேரம் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. 2-வது நாளாக நேற்று அதிகாலையிலும் தூத்துக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது.

தூத்துக்குடி புதுத்தெரு அருகே உள்ள ஜார்ஜ் சந்து பகுதியைச் சேர்ந்த பிரைட்டன் என்ற மாற்றுத் திறனாளியின் வீடு மழைக்கு இடிந்து விழுந்தது. பொருட்கள் சேதமடைந்தன. வடபாகம் போலீஸார் விசாரனை நடத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x