இரண்டு நாட்களுக்கு அனுமதி - சலூன் கடைகளில் : திரண்ட வாடிக்கையாளர்கள் :
தமிழகத்தில் கரோனா தொற்று பரவலைத் தடுக்க, கடந்த மாதம் 26-ம் தேதி முதல் சலூன்கள், அழகு நிலையங்களை மூட தமிழக அரசு உத்தரவிட்டு இருந்தது. இதனால், மேற்கண்ட நாட்களில் மற்ற கடைகள் திறக்கப்பட்டு இயங்கினாலும், சலூன்கள், அழகு நிலையங்கள் மட்டும் திறக்கப்படவில்லை. கரோனா பரவல் தடுப்பு வழிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டு, சலூன்களில் வாடிக்கையாளர்களுக்கு முடி திருத்தம் மேற்கொள்ளப்படும், தினமும் குறிப்பிட்ட சில மணி நேரங்களாவது சலூன்களை திறக்க அனுமதிக்க வேண்டும் என சலூன் கடை உரிமையாளர்கள் தமிழக அரசிடம் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், கரோனா தொற்று பரவலைத் தடுக்க, 10-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை, முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், நேற்று (மே8), இன்று (மே 8) ஆகிய இருநாட்கள் அனைத்து கடைகளும் திறந்து இருக்கலாம் எனவும் அரசு அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து மாவட்டத்தில் நேற்று சலூன் கடைகள், அழகு நிலையங்கள் திறக்கப்பட்டு இருந்தன. பெரும்பாலான சலூன்களில் நேற்று மதியத்துக்கு பின்னர், வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இன்றும் சலூன்களில் வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு கரோனா பரவல் தடுப்பு வழிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக சலூன் கடை உரிமையாளர்கள் தரப்பில் கூறும்போது, ‘‘இரண்டு நாட்கள் மட்டும் சலூன்கள் திறக்க அனுமதிக்கப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கது. நாங்கள் கரோனா பரவல் தடுப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்றித் தான், வாடிக்கையாளர்களுக்கு முடி திருத்தம் செய்து வருகிறோம். எனவே, எங்களுக்கு பொருளாதார இழப்பை தடுக்கவும், குடும்ப செலவுகளுக்காகவும் தினமும் குறைந்தது 2 மணி நேரமாவது சலூன்களை திறக்க அரசு அனுமதிக்க வேண்டும்,’’ என்றனர்.
