Published : 09 May 2021 03:15 AM
Last Updated : 09 May 2021 03:15 AM
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரியில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை நேற்று முதல் தொடங்கியது.
கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவர்கள் பரிந்துரையின் அடிப்படையில் ரெம்டெசிவிர் மருந்து பயன்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. நாடு முழுவதும் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், ரெம்டெசிவிர் மருந்து பயன்பாடும் பெருமளவு அதிகரித்துள்ளது. இதனால், இதற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனால், ரெம்டெசிவிர் மருந்து கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை சார்பில் ரெம்டெசிவிர் மருந்து சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இதையடுத்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, ரெம்டெசிவிர் மருந்தினை வாங்க கரோனா நோயாளிகளின் உறவினர்கள் சென்னைக்கு வரத் தொடங்கினர். இதனால், அங்கு கூட்ட நெரிசலும், ஒரேநாளில் பலருக்கும் மருந்து கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இதையடுத்து, சேலம், கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் ரெம்டெசிவிர் விற்பனை செய்யப்படும் என அரசு அறிவித்தது. அதன்படி, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரியில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை நேற்று தொடங்கியது.
இதுதொடர்பாக மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தினர் கூறியதாவது:
மருந்து தேவைப்படுவோர், கரோனா நோயாளி அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையின் பரிந்துரைக் கடிதம், கரோனா நோயாளியின் ஆர்டி பிசிஆர் பரிசோதனை சான்றிதழ், நோயாளியின் சிடி ஸ்கேன் அறிக்கை, நோயாளியின் ஆதார் நகல் ஆகிய ஆவணங்களை கொண்டு வர வேண்டும். கரோனா நோயாளி ஒருவருக்கு 6 டோஸ் மருந்து மொத்தம் ரூ.9 ஆயிரத்து 500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதனிடையே, சேலத்தில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை தொடங்கப்பட்டுள்ளதால், சேலம் மற்றும் அண்டை மாநிலங்களைச் சேர்ந்த பலர் மருந்தினை வாங்கிச் செல்ல நேற்று சேலம் வரத் தொடங்கியுள்ளனர். தினமும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மருந்து விற்பனை செய்யப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT