கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் - பெண்கள் இலவச பயணத்திற்கு 379 நகர பேருந்துகளில் அனுமதி :

கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் -  பெண்கள் இலவச பயணத்திற்கு 379 நகர பேருந்துகளில் அனுமதி :
Updated on
1 min read

கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் 379 நகரபேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம்.

தமிழகம் முழுவதும் நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் ஆணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறப்பித்துள்ளார்.

கரோனா பரவல் உள்ள நிலையில் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் விழா இல்லாமல், எளிய முறையில் இந்த சேவை நேற்று தொடங்கப்பட்டிருக்கிறது.

விழுப்புரம் பழைய பேருந்துநிலையம், புதிய பேருந்து நிலையத்திலிருந்து முண்டியம்பாக்கம், கெடார், பண்ருட்டி, கண்டமங்கலம், கல்பட்டு, முகையூர், திருவெண்ணைநல்லூர், அனந்தபுரம், சித்தாத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும் நகரப் பேருந்துகளில் இலவசமாக பெண்கள் மிகுந்த உற்சாகத்துடன் பயணித்து வருகின்றனர்.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் எத்தனை நகரபேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என விழுப்புரம் போக்குவரத்து கழக அலுவலர்களிடம் கேட்டபோது, "238 நகர பேருந்துகளில் 201பேருந்துகள் சாதாரணக் கட்டணபேருந்துகளாகும். இந்த 201 பேருந்துகளிலும் அரசின் உத்தரவுப்படி பெண்கள் பயணிக்கலாம்" என தெரிவித்தனர்.

கடலூர் மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி, விருத்தாசலம், வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார் கோவில்,திட்டக்குடி, நெய்வேலி உள்ளிட்ட 11 இடங்களில் உள்ளஅரசு போக்குவரத்து கழக பணிமனைகளில் இருந்து செல்லும் 178 உள்ளூர் நகர பேருந்துகளின் முன்பக்க கண்ணாடியில் ‘பெண்களுக்கு இலவச பயணம்’ என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. முதல்நாளான நேற்று இப்பேருந்துகளில் பெண்கள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்தனர். இப்பேருந்துகளில் பெண்கள் சமூக இடை வெளியுடன் அமர வைக்கப்பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in