புதிய கட்டுப்பாடுகளால் அரசு பேருந்துகளில் கூட்டம் குறைந்தது : தனியார் பேருந்துகள் எண்ணிக்கை குறைப்பு

புதிய கட்டுப்பாடுகளால் அரசு பேருந்துகளில் கூட்டம் குறைந்தது :  தனியார் பேருந்துகள் எண்ணிக்கை குறைப்பு
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்டத்தில் ஊரடங்கு புதிய கட்டுப்பாடுகளால் அரசுப் பேருந்துகளில் பயணிகள் கூட்டம் வெகுவாக குறைந்துள்ளதால் போக்குவரத்து கழகத்துக்கு வருமான இழப்பு ஏற்பட்டு வருகிறது.

கரோனா 2-வது அலையை தடுக்கும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துவருகிறது. புதிய கட்டுப்பாடுகள் நேற்றுமுன்தினம் அமலுக்கு வந்தன. இரவு நேர ஊரடங்குகாரணமாக திருநெல்வேலி அரசுப் போக்குவரத்து கழக கோட்டத்தில் 50 சதவீத பேருந்துகள், 50 சதவீத பயணிகளுடன் இரவு 10 மணிவரை இயக்கப்படுகின்றன. பெரிய நிறுவனங்கள், வழிபாட்டு தலங்கள் உள்ளிட்டவை மறுஉத்தரவு வரும்வரை மூடப்பட்டுள்ளதால் பேருந்துகளில் பயணிகளின் கூட்டமும் வெகுவாக குறைந்துவிட்டது. திருநெல்வேலி மாநகரில் இருந்து,தெய்வநாயகப்பேரி, திடியூர், மூலைக்கரைப்பட்டி, அரியகுளம், வல்லநாடு, கிருஷ்ணாபுரம், ராமானுஜம்புதூர், சீவலப்பேரி, மானூர், கங்கைகொண்டான், சேரன்மகாதேவி, பத்தமடை, முக்கூடல் போன்ற வழித்தடங்களில் இயக்கப்பட்டு வந்த நகரப்பேருந்துகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. இயக்கப்படும் பேருந்துகளிலும் குறைவான பயணிகளே பயணிப்பதால் அரசுப் போக்குவரத்து கழகத்துக்கு வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவிக்கிறார்கள். இந்த இழப்பை ஈடுகட்ட மத்திய, மாநில அரசுகள் போக்குவரத்து கழகத்துக்கு நிதி ஒதுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதுபோல்,திருநெல்வேலியில் இருந்து பல்வேறு தடங்களுக்கும் இயக்கப்பட்டுவந்த தனியார் பேருந்துகளின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுவிட்டன. அதுபோல், மாநகருக்குள்ளும், மாநகரில் இருந்து பக்கத்து ஊர்களுக்கும் இயக்கப்பட்ட தனியார் டவுன் பஸ்களை, அந்தந்த நிறுவனங்கள் குறைத்துள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in