இனாம்குளத்தூர் அருகே தேர்தல் தகராறில் - அதிமுக பிரமுகரை தாக்கிய திமுக கிளைச் செயலாளர் கைது :

இனாம்குளத்தூர் அருகே தேர்தல் தகராறில் -  அதிமுக பிரமுகரை தாக்கிய திமுக கிளைச் செயலாளர் கைது :
Updated on
1 min read

இனாம்குளத்தூர் அருகே தேர்தலில் திமுக வெற்றி பெற்றதை பட்டாசு வெடித்துக் கொண்டாடியதை போலீஸுக்கு தகவல் தெரிவித்ததாக கருதி, அதிமுக பிரமுகரை தாக்கிய திமுக கிளைச் செயலாளரை போலீஸார் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம் இனாம் குளத்தூர் அருகேயுள்ள பெரிய ஆலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பச்சமுத்து (44). அதிமுக பிரமுகரான இவர், ரங்கம் தொகுதி அதிமுக வேட்பாளர் கு.ப.கிருஷ்ணனுக்கு ஆதரவாக தீவிரப் பணியாற்றி வந்தார்.

இதற்கிடையே, மே 2-ம் தேதி வெளியான தேர்தல் முடிவில் இத்தொகுதியில் திமுக வெற்றி பெற்றதால், அதைக் கொண்டாடும் வகையில் அதே ஊரைச் சேர்ந்த திமுகவினர் சிலர் பட்டாசுகளை வெடித்துள்ளனர்.

அரசியல் கட்சியினர் தேர்தல் கொண்டாட்டங்களில் ஈடுபடக் கூடாது என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருந்த நிலையில், திமுகவினர் அதை மீறி பட்டாசு வெடித்தது குறித்து இனாம்குளத்தூர் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் அங்குசென்று விசாரணை நடத்தினர். ஆனால் அதற்குள் திமுகவினர் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

இந்நிலையில் போலீஸாருக்கு பச்சமுத்துதான் தகவல் சொல்லியிருக்க வேண்டும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், கடந்த 3-ம் தேதி மாலை அதே ஊரைச் சேர்ந்த திமுக கிளைச் செயலாளர் சார்லஸ்(35) உள்ளிட்ட சிலர் பச்சமுத்துவை வீடு தேடிச் சென்று தாக்கியுள்ளனர். இதனால் காயமடைந்த பச்சமுத்து மணப்பாறை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களிலும் பரவியது.

இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பாக பச்சமுத்து அளித்த புகாரின்பேரில் இனாம்குளத்தூர் போலீஸார் நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்து திமுக கிளைச் செயலாளர் சார்லஸை கைது செய்தனர்.

இதுதவிர இவ்வழக்கில் தொடர்புடைய திமுக பிரமுகர்களான பாக்கியராஜ், பொன்னர், ரகுபதி, ஸ்டீபன், சரவணன், இளையராஜா, சுப்பிரமணியன் உள்ளிட்டோரைத் தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in