Published : 05 May 2021 03:13 AM
Last Updated : 05 May 2021 03:13 AM

மத்திய அரசு அறிவித்திருக்கும் - 5 கிலோ தானியங்கள் விரைவில் வழங்கப்படும் : புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவிப்பு

மத்திய அரசு அறிவித்துள்ள 5 கிலோ தானியங்கள் விரைவில் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் கரோனா பரவலை கட்டுப்படுத்தும் முயற்சியில் தனியார் சமூக பொறுப்புணர்ச்சி திட்டத்தின்கீழ் தொழில் நிறுவனங்கள் பங்கெடுப்பதை அரசு ஊக்குவித்து வருகிறது. அதனடிப்படையில் தனியார் தொழில் நிறுவனங்கள் முகக்கவசம், கிருமிநாசினி, வெண்டிலேட்டர் கருவிகள், மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றை சுகாதாரத்துறைக்கு வழங்கி வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக நேற்று தொழில் மற்றும் வணிகத் துறையின்மூலமாக, இந்திய தொழில் கூட்டமைப்பு புதுச்சேரி கிளையுடன் இணைந்து இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் 10 லட்சம் கிருமிநாசினி பாக்கெட்டுகளையும், ஸ்னாம் அலாய்ஸ் நிறுவனம் ஒன்றரை லட்சம் முகக்கவசங்களையும் சுகாதாரத் துறைக்கு வழங்கின.

புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் முன்னிலையில் சுகாதாரத்துறை செயலர் அருணிடம் இவை ஒப்படைக்கப்பட்டன.

இந்நிகழ்ச்சிக்கு பின்னர் ஆளுநர்தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

புதுச்சேரி மக்களின் பாதுகாப்பிற்காக அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் வாங்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மருத்துவ பணியாளர்களின் சுமையை குறைக்கும் நோக்கில் அதிகமான மருத்துவர்கள், செவிலியர்கள் பணியில் அமர்த்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை சந்தித்து மருத்துவ உதவிகள் வழங்குவதில் இறுதிஆண்டு மருத்துவ மாணவர்கள் பேருதவி புரிந்து வருகிறார்கள். அதேபோல், ஓய்வு பெற்ற மருத்துவ நிபுணர்கள், மருத்துவம் படித்தவர்கள் கரோனா நோயாளிகளுக்கு மருத்துவ பணி செய்வதற்காக முயற்சி செய்து வருகிறோம்.

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக மத்திய அரசிடம் 6 லட்சம் தடுப்பூசி கேட்கப்பட்டிருக்கிறது. அவை வந்தவுடன் தடுப்பூசி போடப்படும். ரெம்டெசிவிர் மருந்து 2,000 குப்பிகள் பெறப்பட்டிருக்கிறது. புதுச்சேரியில் எதற்கும் தட்டுப்பாடு இல்லை. மக்கள் பாதுகாப்புக்காக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

பொதுமக்கள் வீட்டிலேயே இருந்து தங்கள் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும். வீட்டில் இருக்கும்போதும் முகக்கவசம் அணிய வேண்டும்.

ஒரு கட்டுப்பாடு விதிப்பதற்கு முன்பு அதனால் எவ்வளவு பேர் பாதிக்கப்படுவார்கள் என்று தெரிந்துதான் கவலையோடு கட்டுப்பாடுகளை விதிக்கிறோம். இதனைமக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அரசு கட்டுப்பாடு விதித்தால்தான் நாம் கட்டுப்பாடாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் மக்களிடம் இருக்கிறது. அனைவருக்கும் சமூக பொறுப்புணர்வு உள்ளது. ஒவ்வொருவரும் தங்களை பாதுகாத்து கொண்டால் சமூகம் பாதுகாக்கப்படும்.

சமுதாயக் குழுக்கள்

சட்டப்பேரவை தேர்தல் முடிந்து,தேர்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. எனவே, அரசியல் கட்சியினர் சிறப்பான முறையில் பொதுமக்களுக்கு உதவ வேண்டும். வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்காக சமுதாயக் குழு அமைக்கப்படுகிறது. அந்தந்த பகுதியில் உள்ளவர்கள் சமுதாயக் குழுவில் சேர்ந்து அரசுக்கு உதவி செய்ய வேண்டும்.

அரசு கொடுக்கும் தளர்வுகளை மக்கள் சரியாக பயன்படுத்தினால் அரசுக்கு உதவியாக இருக்கும். ஆனால், அந்த தளர்வே நோய் பரவுவதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கும்போது இன்னும் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டிய நிலை வருகிறது. மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க மத்திய அரசு தலா 5 கிலோ தானியங்கள் அறிவித்திருக்கிறது. அது விரைவில் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

இவ்வாறு ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x