

தட்டச்சுப் பயிலகங்களில் போதிய இடைவெளியில், பயிற்சி அளிக்க அரசு அனுமதி அளிக்க வேண்டுமென தமிழ்நாடு தட்டச்சு – கணினி பள்ளிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக சங்கத்தின் மாநில தலைவர் எல்.செந்தில், தமிழக அரசின் தலைமை செயலருக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் 2,200 அரசு அங்கீகாரம் பெற்ற தட்டச்சு பயிலகங்கள் உள்ளன. கடந்த, 2020-ல் கரோனா பாதிப்பு காலத்தில் இந்த பயிலகங்கள் முழுமையாக மூடப்பட்டன. செப்டம்பர் மாதம் மீண்டும் திறக்கப்பட்டது. தற்போது கரோனா பரவல் அதிகரிப்பால், மீண்டும் தட்டச்சு மற்றும் கணினி பயிலகங்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.
ஏற்கெனவே, கரோனா காலத்தில் பயிலகங்கள் மூடப்பட்டதால், 10 ஆயிரம் குடும்பங்களுக்கு மேல் வாழ்வாதாரத்தை இழந்தோம். பெரும்பாலான தட்டச்சு பயிற்சி மையங் கள், வாடகை கட்டிடங்களில்தான் செயல்படுகின்றன. நீண்ட காலமாக மையங்களை மூடினால், வாடகையும் கொடுக்க முடியாது.
எனவே, தட்டச்சு மையங்கள் நடத்தி வருபவர்களின் வாழ்வாதாரம் கோள்விக்குறியாகிறது.
தவிர, 2020 பிப்ரவரி மாதம் தேர்வுக்காக தயாரான, 1.50 லட்சம் மாணவ, மாணவியர் தேர்வு எழுத முடியாத நிலையில் உள்ளனர். எனவே, அந்த மாணவர்கள் தேர்வு எழுத வாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும்.
அனைத்து தட்டச்சு பயிற்சி மையங்களிலும் அரசின் வழிகாட்டு முறைப்படி, போதிய இடைவெளியில் ஒவ்வொருவருக்கும் ஒரு மணி நேரம் மட்டும் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஒரே நேரத்தில், மொத்தமாக யாரும் வர மாட்டார்கள். எனவே, பயிற்சி மையத்தை நடத்தி வருபவர்கள், மாணவ, மாணவியர் நலன் கருதி, விதிமுறைகளுடன் தட்டச்சு மற்றும் கணினி பள்ளிகளை திறந்து செயல்படுத்த அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே கோரிக்கை மனுவை, தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கும் அனுப்பியுள்ளனர்.