

கடந்த 2016-ம் ஆண்டு தேர்தலைப்போல, இம்முறையும் சேலம் மாவட்டத்தில் அதிமுக 10 தொகுதிகளை கைப்பற்றியது.
சேலம் மாவட்டத்தில் கெங்க வல்லி, ஆத்தூர், ஏற்காடு, வீரபாண்டி, ஓமலூர், சங்ககிரி, எடப்பாடி, மேட்டூர், சேலம் மேற்கு, சேலம் தெற்கு, சேலம் வடக்கு உள்ளிட்ட 11 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்நிலையில், கடந்த 2011-ம் ஆண்டு சட்டபேரவைத் தேர்தலின்போது, அதிமுக கூட்டணி சேலம் மாவட்டத்தின் 11 தொகுதிகளைக் கைப்பற்றியது.
இதில் அதிமுக 8 தொகுதிகளிலும் அதிமுக-வுடன் கூட்டணியில் இருந்த தேமுதிக 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. கடந்த 2016-ம் ஆண்டு தேர்தலில், சேலம் வடக்கு தொகுதியைத் தவிர மற்ற 10 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றது. சேலம் வடக்குத் தொகுதியை மட்டும் திமுக கைப்பற்றியது.
தற்போது முடிவடைந்த தேர்தலில் அதிமுக தலைமை யிலான கூட்டணி, சேலம் வடக்கு தொகுதியை தவிர மற்ற 10 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது. இதில், கெங்கவல்லி, ஆத்தூர், ஏற்காடு, வீரபாண்டி, ஓமலூர், சங்ககிரி, எடப்பாடி, சேலம் தெற்கு ஆகிய 8 தொகுதிகளில் அதிமுக-வும், மேட்டூர், சேலம் மேற்கு ஆகிய தொகுதியில் அதிமுக-வின் கூட்டணிக் கட்சியான பாமக-வும் கைப்பற்றியுள்ளன.
தொடர்ந்து, இரண்டாவது முறையாக சேலம் மாவட்டத்தில் 10 தொகுதியை அதிமுக தக்க வைத்துள்ளது.
கடந்த தேர்தலைப் போலவே, இத்தேர்தலிலும் திமுக சேலம் வடக்கு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது. மேலும் கடந்த முறை வெற்றி பெற்ற ராஜேந்திரனே இம்முறையும் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.