Published : 04 May 2021 03:14 AM
Last Updated : 04 May 2021 03:14 AM

பாளையங்கோட்டை, அம்பை, நாங்குநேரியில் - 2016-ல் வெற்றிபெற்ற கட்சியே மீண்டும் வெற்றி : 2 எம்.எல்.ஏக்கள் தோல்வி

பாளை, அம்பை, நாங்குநேரி தொகுதிகளில் 2016-ல் வெற்றிபெற்ற கட்சியே மீண்டும் வெற்றிபெற்றுள்ளது.

திருநெல்வேலி தொகுதியில் நயினார்நாகேந்திரன் வெற்றி பெற்றதால், முதன்முறையாக பாஜகவசம்இத்தொகுதி சென்றுள்ளது. இங்கு திமுக எம்.எல்.ஏ.வாக இருந்த லட்சுமணன் தோல்வியைத் தழுவியுள்ளார்.

பாளையங்கோட்டையில் அதிமுக,திமுக கட்சிகள் இம்முறை புதுமுகங்களை நிறுத்தியிருந்தன. திமுக எம்.எல்.ஏவாக இருந்த மைதீன்கானுக்கு இம்முறை அக்கட்சி வாய்ப்பு அளிக்கவில்லை. அவருக்கு பதில் நிறுத்தப்பட்ட திமுக வேட்பாளர் அப்துல்வகாப் வெற்றிபெற்றுள்ளார். இத்தொகுதிக்கு புதிய எம்.எல்.ஏ. கிடைத்திருக்கிறார்.

அம்பாசமுத்திரம் தொகுதி கடந்தமுறை அதிமுக வசம் இருந்தது. எம்.எல்.ஏவாக இருந்த முருகையாபாண்டியனுக்கு இம்முறைஅக்கட்சி வாய்ப்பு அளிக்கவில்லை. கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி அதிமுக வேட்பாளர் இசக்கிசுப்பையா வெற்றிபெற்றுள்ளார்.

நாங்குநேரி தொகுதி கடந்தமுறை காங்கிரஸ் வசமிருந்தது. 2019-ல் நடந்த இடைத்தேர்தலில் அதிமுக வசம் சென்றது. இடைத்தேர்தலில் தோல்வியை தழுவியிருந்த ரூபிமனோகரன், தற்போது வெற்றிபெற்று, இத்தொகுதியை மீண்டும் காங்கிரஸ் வசமாக்கியுள்ளார். எம்எல்ஏவாக இருந்த நாராயணனுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படாத நிலையில், அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்ட கணேசராஜா தோல்வியை தழுவியுள்ளார்.

ராதாபுரம் தொகுதியில் எம்எல்ஏவாக இருந்த இன்பதுரை அதிமுக வேட்பாளராக மீண்டும் போட்டியிட்டு, தோல்வியைத் தழுவியுள்ளார். திமுக சார்பில் மீண்டும் போட்டியிட்ட மு. அப்பாவு வெற்றிபெற்றுள்ளார். இத்தொகுதியில் கடந்த சட்டப்பேரவை தேர்தல் வெற்றி தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அப்போதும் இதே வேட்பாளர்கள்தான் போட்டியிட்டிருந்தனர். மீண்டும் அவர்களையே அந்தந்த கட்சிகள் வேட்பாளர்களாக நிறுத்தின. பரபரப்பான போட்டிக்கு மத்தியில் இத்தொகுதியை திமுக தன்வசம் கொண்டுவந்துள்ளது.

மாவட்டத்தில் அம்பாசமுத்திரம் தொகுதியை அதிமுகவும், பாளையங்கோட்டை தொகுதியை திமுகவும், நாங்குநேரியை காங்கிரஸும் மீண்டும் தக்கவைத்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x