Published : 04 May 2021 03:14 AM
Last Updated : 04 May 2021 03:14 AM

தென்மாவட்டங்களில் 22 தொகுதிகளிலும் - கணிசமான வாக்குகளைப் பெற்ற நாம் தமிழர் கட்சி :

திருநெல்வேலி

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய தென்மாவட்டங்களில் உள்ள 22 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், நாம் தமிழர் கட்சி கணிசமான வாக்குகளைப் பெற்றுள்ளது. பெரும்பாலான தொகுதிகளில் 3-வது இடத்தை அக்கட்சி வேட்பாளர்கள் பிடித்துள்ளனர்.

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி 29,58,458 வாக்குகளை (6.85 சதவீதம்) பெற்று 3-வது இடத்தை பிடித்திருக்கிறது. திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் அக்கட்சி வேட்பாளர்கள் கணிசமான வாக்குகளை பெற்றுள்ளனர்.

திமுக, அதிமுக மற்றும் கூட்டணியைப்போல் பிரம்மாண்டமான பிரச்சாரம், வாக்கு சேகரிப்பு, கட்சி நிகழ்ச்சிகள் இல்லாமல், மிக சாதாரணமாக நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் வீடுவீடாக சென்று, துண்டுப் பிரசுரங்களை கொடுத்து, ஆதரவு திரட்டினர். பொதுமக்களுக்கு எவ்வித அறிமுகமும் இல்லாத புதுமுக வேட்பாளர்களே களமிறக்கப்பட்டனர். அதிலும் பெண்களுக்கு சமவாய்ப்பு தரப்பட்டிருந்தது. அக்கட்சி தலைவர் சீமான் ஒவ்வொரு தொகுதியிலும் பிரச்சாரம் செய்தார். வேறு நட்சத்திர பேச்சாளர்கள் யாரும் பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை.

எவ்வித பின்புலமும் இல்லாமல் களமிறக்கப்பட்ட இந்த வேட்பாளர்களுக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் பலர் தீவிரமாக வாக்கு சேகரித்தனர். இது பல்வேறு தொகுதிகளிலும் முதல்தலைமுறை மற்றும் இளைய வாக்காளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியதாக அக் கட்சியினர் தெரிவிக்கிறார்கள். பணபலம், அதிகார பலமிக்க கட்சிகளுக்கு மத்தியில் ஒவ்வொரு தொகுதியிலும் 10 ஆயிரத்துக்கு அதிகமான வாக்குகளை தங்கள் கட்சியினர் பெற்றுள்ளது மிகப்பெரிய வெற்றி என்று அவர்கள் பெருமிதம் தெரிவிக்கிறார்கள்.

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் 22 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி பெரும்பாலும் 10 ஆயிரத்துக்கு அதிகமாகவே வாக்குகளைப் பெற்றுள்ளது. தூத்துக்குடி தொகுதியில் அக்கட்சி வேட்பாளர் வே.வேல்ராஜ் அதிகபட்சமாக 30,937 வாக்குகளை பெற்றுள்ளார். மக்கள் நீதி மய்யம், அமமுக, சமக, தேமுதிக போன்ற கட்சிகளை காட்டிலும், நாம் தமிழர் கட்சி அதிக வாக்குகளுடன் முன்னிலை பெற்றுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x