

மாம்பழம் சீசன் தொடங்கியுள்ள நிலையில் சேலம் மார்க்கெட்டுக்கு மாம்பழங்கள் வரத்து குறைவாகவே உள்ளது. சந்தைகளில் பெரும்பாலும் பழுக்காத நிலையில் மாங்காய்கள் அதிகளவில் வருகின்றன.
இந்நிலையில், சேலம் அடுத்த அயோத்தியாப்பட்டணம் பகுதிகளில், மாங்காய்களை செயற்கை முறையில் பழுக்க வைத்து, விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து, அயோத்தியாப்பட்டணம் பகுதிகளில் உள்ள பழக் கிடங்குகளில் உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர். சோதனையில், மேட்டுப்பட்டி தாதனூரில், வெங்கடேசன் என்பவருக்குச் சொந்தமான கிடங்கில், ரசாயன மருந்து களை தெளித்து, பழுக்க வைக்கப்பட்ட சுமார் 1,700 கிலோ மாம்பழங்களை பறிமுதல் செய்தனர்.
மேலும், மாங்காய்களை பழுக்க வைக்க பயன்படுத்தும் எத்திபான் ரசாயனம் 3 லிட்டர், கரைத்து வைக்கப்பட்டிருந்த 4 லிட்டர் எத்திபான் கரைசல் ஆகியவையும் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறும்போது, “பறிமுதல் செய்யப்பட்ட பழங்களின் மதிப்பு ரூ.1.40 லட்சமாகும். மாங்காய்களை செயற்கையாக பழுக்க வைத்த வியாபாரி மீது உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்படும்” என்றனர்.