Published : 02 May 2021 03:14 AM
Last Updated : 02 May 2021 03:14 AM

குண்டும், குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அச்சம் - பச்சமலைக்கு செல்லும் சாலை சீரமைக்கப்படுமா? : வனத் துறையிடமிருந்து மாநில நெடுஞ்சாலைத் துறைக்கு மாற்ற கோரிக்கை

ஜல்லிக் கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படும் துறையூர்- பச்சமலை சாலை.

திருச்சி

துறையூரிலிருந்து பச்சமலைக்குச் செல்லும் சாலை ஜல்லிக் கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளதால், இச்சாலையை வனத் துறையிடமிருந்து மாநில நெடுஞ்சாலைத் துறைக்கு மாற்றி சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கிழக்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக 527.61 சதுர கி.மீ பரப்பளவில் பச்சமலை அமைந்துள்ளது.

கடல் மட்டத்திலிருந்து 1,072 மீட்டர் உயரம் கொண்ட இப் பகுதியில், வனத் துறையின் கணக்கெடுப்பின்படி 154 வகை பறவை இனங்கள், 135 வகை பட்டாம்பூச்சி இனங்கள் மற்றும் ஏராளமான மான்கள் உள்ளன. இதுதவிர பருவமழைக் காலங் களில் மங்களம் அருவி, கோரை யாறு அருவிகளில் நீர்வரத்து அதிகமாக இருக்கும். இதனால், இயற்கை எழில் கொஞ்சும் இந்த பச்சமலை ‘சூழல் சுற்றுலா' தலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இப்பகுதியில் உள்ள 40-க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்களில் வசிக்கும் மக்களின் பயன்பாட்டுக்காக துறையூரிலிருந்து உப்பிலியபுரம், சோபனபுரம் வழியாகவும், துறையூ ரிலிருந்து அடிவாரம், கீரம்பூர், செங்காட்டுப்பட்டி, மூலக்காடு வழியாகவும் பச்சமலைக்கு 2 சாலைகள் செல்கின்றன. இவற் றில், உப்பிலியபுரம், சோபனபுரம் வழியாகச் செல்லும் சாலை கடந்த பல ஆண்டுகளாக சேத மடைந்து, போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. அதனால், இவ்வழியாக கனரக வாகனங்கள் மட்டுமின்றி கார், இருசக்கர வாகனங்களை ஓட்டிச் செல்வதும் ஆபத்துக்குரியதாக மாறிவிட்டதால், வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே சென்றுவருகின் றனர்.

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறியது:

துறையூரிலிருந்து உப்பிலிய புரம், சோபனபுரம் வழியாக டாப் செங்காட்டுப்பட்டி, பூதக்கால், நல்லமாத்தி, சோளமாத்தி ஆகிய இடங்களுக்கு அரசுப் பேருந்து வசதி உள்ளது. அதேபோல, சேலம் மாவட்டம் ஆத்தூரிலிருந்து கெங்கவல்லி, தம்மம்பட்டி, உப்பிலி யபுரம், சோபனபுரம் வழியாக பச்சமலைக்கு பேருந்துகள் இயக் கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு பேருந்து வசதி செய்துகொடுத்த அரசு, அவை சென்று வருவதற்கு தரமான சாலை வசதியை செய்துகொடுக் கவில்லை. குறிப்பாக, சோபனபுரம் வனத் துறை சுங்கச்சாவடியிலி ருந்து டாப் செங்காட்டுப்பட்டி வரையிலான 21 கி.மீ தொலைவு தார் சாலையில் பல இடங்களில் ஜல்லிக் கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுகின்றன. ஆபத்தான வளைவுகள், தாழ்வான பகுதிகளில்கூட இந்த நிலையே உள்ளது. இதுபோன்ற இடங்களில் வாகனம் கட்டுப்பாட்டை இழந் தாலோ அல்லது தடுமாறினாலோ சுமார் 1,500 அடி பள்ளத்தில் விழ வேண்டும்.

இச்சாலையை சீரமைத்துத் தருமாறு பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும், வனத் துறை யினர் இதுவரை கண்டுகொள்ளவே இல்லை. சாலையை சீரமைக்க நிதியில்லை எனக் காரணம் கூறி இழுத்தடித்து வருகின்றனர். ஆனால், இதே பச்சமலையில் மாநில நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டிலுள்ள சேலம் மாவட்ட சாலைகள் தரமாக உள்ளன. எனவே, இந்தச் சாலைகளையும் வனத் துறையிடமிருந்து மாநில நெடுஞ்சாலைத் துறைக்கு மாற்றி, உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தலின்போது அதிமுக, திமுக என 2 பிரதான கட்சிகளின் வேட்பாளர்களும் இதை முக்கிய வாக்குறுதியாக கொடுத்துள்ளனர். எனவே, ஆட்சி அமைந்ததும் வெகுவிரைவில் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x